மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார், மக்கள் முன் மடிப்பிச்சை கேட்டு வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரச்சாரம் செய்ய கால அவகாசம் குறைவான நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
அந்த வகையில், பா.ஜ.க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
விருதுநகர் தொகுதியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்த நடிகை ராதிகா சரத்குமார், அருகில் இருந்த தனது கணவரிடம் “மாமா மைக் பிடிங்க” என்று கூறி அவரிடம் மைக்க கொடுத்தார். பிறகு, தனது சேலை முந்தானையை எடுத்து, “இந்த மாதிரி புடிச்சு கேட்டேன், நான் எல்லாமே உங்களுக்காக கொடுத்தேன், இனிமே எங்கிட்ட இந்த உசுரு மட்டும்தான் இருக்கு, அதை நான் உங்களுக்கு கொடுக்கிறேன்.” என்று கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது, பேசியதாவது: “இது பாராளுமன்ற தேர்தல், இங்க நீங்கள் தேர்ந்தெடுக்கிறவர்கள் டெல்லியில் போய், உங்களுக்கு இங்கே என்ன தேவைகள் இருக்கோ, சீராக செயல்பட நான் உங்களுக்காக ஒரு சகோதரியாக, உங்கள் கூட பிறந்த தோழியாக, ஏன் சித்தியாகவே நான் செயல்படுவேன். கடந்த சில வருஷங்களாக, அவன் திருடுறான், இவன் திருடுறான், அவன் ஜெயிலுக்குப் போறான், இவன் ஜெயிலுக்குப் போறான், எல்லாரும் மாமியார் வீட்டுக்கு போகிற மாதிரி போய்விட்டு வந்துகொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் மாறனும், மக்களுக்காக நிறைய விஷயங்கள் செய்யனும், நான் இந்த தொகுதியில் உங்களுக்காக சிறப்பாக செயல்படுவேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“