க.சண்முகவடிவேல்
Tamilnadu-bjp | annamalai | trichy: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை ஜூலை 28-ம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கினார். தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் திருச்சியில் நேற்று பாதயாத்திரை மேற்கொண்டார். மணப்பாறையில் தொடங்கியவர் பரப்புரை மேற்கொண்டு இரவு திருச்சியில் தங்கினார்.
இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியது பின்வருமாறு:-
தமிழகத்தில், பா.ஜ.க நேரடியாக அதிகாரத்தில் இல்லை. மத்திய அரசாங்கத்தால், எதை எதை செய்ய முடியுமோ, அதை செய்து கொண்டிருக்கிறோம். மற்ற பிரச்னைகளுக்கு மக்கள் சார்பாக, நாங்கள் போராடுகிறோம். தமிழகத்தில், பல பகுதிகள் பின் தங்கியிருக்கிறது. இலுப்பூர், தோகைமலை போன்ற சிறு சிறு பகுதி மக்களை, வளர்ச்சி என்பது தொடமலேயே போய் விட்டது. நம்பிக்கையோடு எங்களிடம் வருபவர்களுக்கு, நாங்கள் செய்து கொடுக்கிறோம்.
காவல்துறையின் கவனம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை, சிதறிப் போய் விட்டது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ஆகியோர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு, என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
நாகலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள். ஆனால், அவர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள் உப்பு போட்டு சாப்பிடுவர்கள் என்றும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அவமானப்படுத்தியுள்ளார்.
அவரை தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. அவர் தொடர்ச்சியாக பொறுக்கிப் போன்று, ஆளுநரையும், என்னையும் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
இவர் மீது தமிழகத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நாகலாந்தில் யாராவது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், 153அ என்ற சட்டப் பிரிவில் அவரை ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு கைது செய்து, நாகலாந்து அழைத்துச் சென்றுவிடலாம் என்றார்.
தமிழகத்தில் காவல்துறையின் கவனம் சிதறி போயிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதனை நான் தொடர்ந்து கூறி வருகின்றேன். தமிழக காவல்துறையை பொறுத்தவரை, பாரதி ஜனதா கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும். பி.ஜே.பி காரனை பிடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
தி.மு.க ஆட்சியில், தமிழக காவல் துறை, நடுநிலை தவறி விட்டது. பா.ஜ.க கட்சிக்காரர்களை கைது செய்வது மட்டுமே தமிழக போலீசின் குறிக்கோளாக உள்ளது. பேருந்தில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு போவதை ஓட்டுநரும் கேட்கவில்லை, நடத்துனரும் கேட்கவில்லை, வேறு யாரும் கேட்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண்மணி சமூக அக்கறையுடன் கேட்டுள்ளார்.
அவர் நடந்து கொண்ட விதம் வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் கேட்டது நியாயம். நீதிபதி அதனை பார்த்து தான் அவருக்கு பெயில் கொடுத்துள்ளார். பள்ளி மாணவர்களை அமர வைத்து ரெக்கார்ட் டான்ஸ் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க-வினர். தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் நாங்கள் மக்களை சென்று சந்தித்து வருகிறோம். எல்லா இடங்களிலும் கூட்டமாக மக்கள் எங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“