திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் கட்டுப்பாட்டில் சுமார் 110 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் உள்ளதாகவும் அந்த இடத்தில் ஜெகத்ரட்சகன் தனது மனைவி பெயரில் கல்லூரி கட்டி வருவதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில், பஞ்சமி நிலங்களை திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆக்கிரமித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளதால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ரகு ஆகியோர் செப்டம்பர் 06ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ரகு கையெழுத்திட்டு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “திண்டிவனம் வட்டம், கீழ் எடையாளம் கிராமத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில், விழுப்புரம் மாவட்டம், வழுதாவூர் பகுதியைப் பூர்வீகமாக கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் சுமார் 110 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த இடத்தில் ஜெகத்ரட்சகன் தன் மனைவி பெயரில் கல்லூரி கட்டி வருகிறார். அவரது பல நிறுவனங்களில் இதேபோல் பஞ்சமிநிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இடம் மட்டுமில்லாமல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள்மீது உரிய விசாரணை செய்து,பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இன சமூக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வந்த பாஜகவின் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஆயிரம் ஏக்கர் பஞ்சமிநிலங்கள் உள்ளன. இதில், சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் நிபந்தனை மீறப்பட்டதாக தெரிய வருகிறது. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளன. முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் கட்டுப்பாட்டில் மட்டும் சுமார் 110 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை மீட்டு பட்டியல் இன சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.