சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தி.மு.க ஒரு தீய சக்தி என்று அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர். தி.மு.க-வை வீழ்த்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைய வேண்டும் என நேரில் வற்புறுத்தினோம் என்று கூறினார்.
ஈரோடு இடைத் தேர்தலில், தி.மு.க கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரண்டு அணிகளாக பிரிந்து தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இதனால், கூட்டணி கட்சியான பா.ஜ.க ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பா.ஜ.க தரப்பில், ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுக்குதான் ஆதரவு என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஈரோடு இடைத் தேர்தலில் பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்ன என்று கேள்விகள் எழுந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 1) இரவு டெல்லிக்கு அவசரமாக சென்றார். டெல்லி சென்ற அண்ணாமலை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை வியாழக்கிழமை (பிப்ரவரி 2) காலை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசியல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி ஆகியோர் இன்று (பிப்ரவரி 3) காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தையும் நேரில் சந்தித்து பேசினர்.
இது குறித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, “தி.மு.க ஒரு தீய சக்தி என்று அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர். தமிழக மக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. தி.மு.க அரசு மீது மக்களிடம் நம்பிக்கை இல்லை. மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தி தி.மு.க தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. இந்த ஆட்சி மக்களிடம் கெட்ட பெயர் வாங்கியுள்ளது.
இந்த நேரத்தில் நிலையான, உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்திற்கு தேவை. தி.மு.க-வை எதிர்க்க வேண்டும் என்றால் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். தி.மு.க-வை வீழ்த்த ஒருங்கிணைந்த அ.தி.மு.க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினோம். ஒன்றிணைந்து இருந்தால் தி.மு.க-வை வீழ்த்த முடியும் என்று கூறினோம். பா.ஜ.க நிலைப்பாடு குறித்து தெரிவிக்க பிப். 7-ம் தேதி வரை அவகாசம் உள்ளது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“