பா.ஜ.க-வின் மாநில தலைவரான அண்ணாமலையை மாற்றி புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் உலா வரும் நிலையில், அதற்கான விளக்கத்தை அக்கட்சியின் மாநில் துணைத் தலைவர் கரு. நாகராஜன் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் தற்போது பா.ஜ.க மாநில தலைவர் பதவி தான் பேசுபொருளாகி இருக்கிறது. சில ஆண்டுகளாக அக்கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை பதவி வகித்து வருகிறார். முன்னதாக, அண்ணாமலைக்கு பதவி வழங்கப்பட்ட போது, கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டது.
எனினும், பா.ஜ.க-வின் மாநில தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின்னர், அவரது தலைமையில் அக்கட்சி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்தது. இந்த தேர்தல்களில் பா.ஜ.க-வின் வாக்கு சதவீதம் அதிகரித்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால், சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க அமைத்திருந்த கூட்டணி, அண்ணாமலையால் முறிந்து போனது என்றும் ஒரு கருத்து இருந்து வருகிறது.
குறிப்பாக, அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகியான ஜெயக்குமார், பல சந்தர்ப்பங்களில் அண்ணாமலையை விமர்சித்திருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றி விட்டு வேறு ஒரு நபரை புதிய தலைவராக நியமிக்க கட்சி தலைமை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் டெல்லி சென்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதனால், அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி உருவாகலாம் என்று அரசியல் களத்தில் பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தான், அண்ணாமலையின் தலைவர் பதவி குறித்த விவாதமும் கிளம்பி இருக்கிறது. இந்த சூழலில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, "மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில தலைவரை மாற்றுவது பா.ஜ.க-வின் வழக்கமான நடைமுறைதான். அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு தர வேண்டும் என்பதை தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள். அந்த முடிவை அறிந்து கொள்ள நாங்கள் ஆவலாகவும், ஆர்வத்துடனும் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - புதிய தலைமுறை தொலைக்காட்சி