நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பாஜக தனது கருத்துக் கணிப்பை தொடங்கியுள்ளதாகவும் அதன்படி அதிமுகவிடம் 20% இடங்களைப் பெற திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தற்போது 35 மாவட்டங்களில் உள்கட்சித் தேர்தலில் கவனம் செலுத்தி வருவதாகவும், அடுத்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, பாஜக தனக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் பற்றி கருத்துக் கணிப்புகளில் இறங்கியது. கருத்துக் கணிப்புகளின்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து 20% இடங்களைப் பெற எதிர்பார்ப்பதாகவும் இதன் மூலம் பாஜக தன்னை பலப்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் கூறுகின்றனர்.
கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் மாவட்டங்களின் மீது பார்வை உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால், பாஜக எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான இடங்களைப் பெறும் என்று நம்புவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் பங்கிட்டு கொடுப்பதில் அதிமுகவினர் தொடர்ந்து சிக்கனத்தைக் கடைபிடிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போது ஆளும் திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 3% மட்டும்தான். தேர்தல்களில் அதிமுக எப்போதுமே 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வந்துள்ளது. இப்போது, அதிமுக அதிக இடங்களில் போட்டியிட முயற்சிக்கும். அதே நேரத்தில், கூட்டணியில் இருந்தபோது பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் அதிமுக அந்த இடங்களிலும் போட்டியிடும்” என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமை எப்படி நடந்துகொள்ளும் என்று கேள்வி எழுப்பியபோது, கூட்டணி கட்சிகள் பேச்சு வார்த்தைக்கு வரும்போது கடுமையாக பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியுள்ளதால், பாஜக விரும்பாத வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை களமிறக்க முயற்சிக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில், பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த சூழலில்தான், வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவிடம் பாஜக 20% இடங்களை எதிர்பார்ப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"