கோவையில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அவர் பேசும்போது, 'இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பன்னுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பன் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும்' என்று கூறி கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகிய நிலையில், நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோவும் வைரலாகியது. இந்த வீடியோவை வெளியிட்டதற்கு மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க எம்.பி.கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பா.ஜ.க-வினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை பா.ஜ.க. நிர்வாகி சதீஷ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க மண்டல தலைவராக சதீஷ் செயல்பட்டு வந்த நிலையில், அவர் அன்னபூர்ணா ஓட்டல் அதிபர் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பா.ஜ.க தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோரின் ஒப்புதலுடன் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டல தலைவராக செயல்பட்டு வந்த ஆர். சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியினுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“