scorecardresearch

அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாமலை தலைமையில் டிச.7ல் போராட்டம் – பா.ஜ.க அறிவிப்பு

அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் டிசம்பர் 7-ம் தேதி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ.க விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.

அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாமலை தலைமையில் டிச.7ல் போராட்டம் – பா.ஜ.க அறிவிப்பு

அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் டிசம்பர் 7-ம் தேதி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ.க விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் கூறியதாவது:

அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பை மீறி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அன்னூர் விவசாயிகளின் போராட்டத்தை தமிழக அரசு செவி சாய்க்க மறுத்ததால் பாஜக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மேலும் அன்னூர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 7ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், அன்னூர் சந்திப்பில் மதியம் 2 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டு 115 குளங்கள் நிரப்பப்பட்டு விவசாயத்திற்கு அன்னூர் தயாராகும் வேளையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றார்.

அதேபோல, வனத்தை விட்டு விவசாய நிலத்திற்குள் வரும் காட்டு பன்றியை சுட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல் இருந்தும் தமிழக அரசு இதுவரை காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவோ, சுட்டுக்கொல்லவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனை கண்டித்து டிசம்பர் 14-ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்.
போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் கோட்டை நோக்கி விவசாயிகள் செல்வோம்.

அதேபோல, துடியலூர் அருகே உள்ள டியூகாஸ் நிறுவனத்தில் 14 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இது தமிழக அரசின் செயல். அதே சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் டியூகாஸ் விவகாரத்தில் மத்திய அரசை காரணம் காட்டி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசை கண்டித்து கோவையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் ஜி .கே நாகராஜ் கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp farmers wing announced protest to support to annu farmers