இந்துக்களை இழிவுபடுத்தும் வகையிலும் வகுப்புவாத கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் கூறி திமுக எம்பி ஆ.ராஜா மீது தமிழக பாஜக செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளது.
பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் டிஜிபி அலுவலகத்தில் புகாரில், மாநில மக்கள் தொகையில் 85% உள்ள இந்துக்களின் மத நம்பிக்கைகளை அழிக்கும் நோக்கில், ராஜாவின் பேச்சு அவதூறானது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்துக்கள் ஏற்கனவே வருத்தத்திலும் மனம் உடைந்து போயிருக்கிறார்கள். இந்துக்களின் வாக்குகளைப் பெற்று எம்.பி.யான ஒருவர், ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரு. நாகராஜன் கூறினார்.
முன்னதாக திமுக எம்.பி ஆ. ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. வீடியோவில் ஆ. ராசா பேசியிருப்பதாவது: “ஆனால், உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உறக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கிற என்பதை விடுதலையும் முரசொலியும் திராவிடர் முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் எழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆ. ராசா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்!” என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"