சென்னையை அடுத்த பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தை, இரவோடு இரவாக போலீசார் அகற்றினர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் உள்ள பங்களாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குடியேறினார். இந்நிலையில் அவரது வீட்டின் முன் பாஜக கொடியை பறக்க விடும் நோக்கில், அக்கட்சியினர் கொடிக் கம்பம் அமைத்தனர்.
இதற்கு அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிரே மசூதி அமைந்திருப்பதால் இது தேவையற்ற மோதல் போக்கை உருவாக்கும் என கொடிக் கம்பத்தை அகற்றக் கோரி, நேற்றிரவு அண்ணாமலை வீட்டை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் அறிந்த பாஜகவினர் அங்கு குவிந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வந்தது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டும் என இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர்.
அப்போது அங்கு வந்த பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் போலீசாரிடமும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கொடிக்கம்பத்தை அகற்ற போலீசார் ஜே.சி.பி. வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. கண்ணாடியை உடைத்தனர்.
இதனால் போலீசாருக்கும் பா.ஜனதாவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்து நீலாங்கரை, பனையூர் பகுதியில் இருக்கிற தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.
பிறகு கொடி கம்பத்தை போலீசார் அகற்றினர்.
இந்த சம்பவங்களால் நள்ளிரவில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“