சென்னை, திருவல்லிக்கேணியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமில் ஏற்பட்ட வாக்குவதத்தில் பா.ஜ,க-வினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்திய பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு கட்சியினர் ஆங்காங்கே அமர்ந்து, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் பா.ஜ.க நிர்வாகிகள் சுமன், கமலக்கண்ணன், மணிகண்டன், செந்தில் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கே வந்த தி.மு.க-வினருக்கும், பா.ஜ.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது பா.ஜ.க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த பா.ஜ.க மண்டல துணைத் தலைவர் சுமன் (49) என்பவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் சுமன் புகார் அளித்துள்ளார். மேலும், மாவட்ட தலைவர் விஜய்ஆனந்த் சென்னை காவல் ஆணையர்அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க நிர்வாகி மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருவல்லிக்கேணியில் செவ்வாய்க்கிழமை மாலை பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“