பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆபாச வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் பா.ஜ.க-வினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளரிடம் வாய் தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பா.ஜ.க தலைவர் அண்ணமலை ஊடகவியலாளர்களை மிரட்டும் விதமாக பேசியதற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வலைதளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
இதனிடையே, கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாச வார்தைகளால் பேசி தன்னுடைய முகநூல் பக்கத்தில் புதன்கிழமை இரவு பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், பா.ஜ.க மண்டல பொறுப்பாளர் முகுந்தன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசிய வீடியோ குறித்து புகார் அளித்திருந்தார்.
மேலும், கோவை பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, வசந்தராஜன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"