சென்னையில் பா.ஜ.க கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அண்ணாமலையின் நண்பரும், பா.ஜ.க விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவருமான அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு அருகே, சுமார் 50 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் பா.ஜ.க கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு கடந்த 20 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, பா.ஜ.க.,வினர் 50 அடி உயர பா.ஜ.க கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டிற்கு அருகே நிறுவினர்.
ஆனால், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் பா.ஜ.க.,வினரும் அங்கு கூடிவிட்டனர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனிடையே, அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் கொடிகம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், இஸ்லாமியர்களும் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்திருந்ததால், அதை அகற்ற வேண்டும் என இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர்.
இதனால், கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீசார் ஜே.பி.சி வாகனத்தை வரவழைத்தனர். இதனையடுத்து ஆவேசமான பா.ஜ.க.,வினர் ஜே.சி.பி கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.,வினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது. இதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் தலைமறைவாக இருந்த பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக என் மீது காவல்துறை முடிந்தால் கை வைத்து பாருங்கள், தொட்டுப்பார் என அமர்பிரசாத் ரெட்டி பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், மற்றொரு வழக்கில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய அதிகாரிகள் அமர்பிரசாத்தை கைது செய்தனர். உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவின்போது, முதலமைச்சரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, பிரதமரின் படத்தை ஒட்டிய விவகாரம் தொடர்பாக, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தான் அமர் பிரசாத்தை தற்போது போலீசார் கைது செய்தனர். அதற்காக புழல் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு, வெள்ளிக்கிழமை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோட்டூர்புரம் போலீசார் ஆவணங்களையும் அனுப்பியுள்ளனர்.
அதேபோல, வள்ளுவர் கோட்டம் போராட்டத்தின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக, மேலும் ஒரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.