திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் செங்கல்லை திருடிவிட்டதாக பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கல்லை திருடினாரா? என்ன நடந்தது.
திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். உதயநிதி தனது தொகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பதோடு மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் வாக்கு சேகரிக்கும்போது அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சிக்க பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில், எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒரு செங்கல்லைக் காட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படாமல் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக நகைச்சுவையாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
தேர்தல் பிரசாரத்தில், உதயநிதி ஸ்டாலின், “மதுரையில் 3 வருஷத்துக்கு முன்னாடி அதிமுக - பாஜக அரசுகள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக்கொடுத்தாங்க… உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அந்த எய்ம்ஸ் மருத்துவமனையை நான் கையோட எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறி எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒரு செங்கல்லை தூக்கிக் காட்டினார். இதுதான் அவர்கள் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்று உதயநிதி நகைச்சுவையாகக் கூற சுற்றி இருந்த கூட்டத்தினர் சிரிப்பலை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவிருந்த வளாகத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை திருடிவிட்டார் என்று பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27.01.2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 01.012.2020 அன்று பூமி பூஜை நடத்தப்பட்டது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாப்புக்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்கு இருந்து ஒரு செங்கல்லை திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி திருடியிருக்கிறார். இந்த உண்மையை அவரே நேற்று (25.03.2021) விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டார். அதோடு தான் திருடிகொண்டு வந்த அந்த செங்கலையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்து காண்பித்தார். அவருடைய, இந்த செயல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380-ன் படி தண்டைக்குரிய குற்றச் செயலாகும். ஆகவே இந்த புகார்மனு மீது விசாரணை செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கல்லை கைபற்றி சட்டப்படி தண்டனை பெற்று தந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை நகைச்சுவையாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய உதயநிதி செங்கல்லை எடுத்துக் காட்டிய நிலையில், பாஜக நிர்வாகி உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை திருவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.