scorecardresearch

‘மீனாட்சி அம்மன் கோவிலில் திருநீறு கடை வச்சவர்தானே நீங்க..!’ செல்லூர் ராஜுவை போனில் கலாய்த்த பா.ஜ.க நிர்வாகி

பாஜக கூட்டம் காக்கா கூட்டம் என்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் போனில் பேசிய பாஜக நிர்வாகி, “மீனாட்சி அம்மன் கோவிலில் திருநீறு கடை வச்சவர்தானே நீங்க…” என்று வஞ்சப் புகழ்ச்சியாக கலாய்த்துள்ளார்.

‘மீனாட்சி அம்மன் கோவிலில் திருநீறு கடை வச்சவர்தானே நீங்க..!’ செல்லூர் ராஜுவை போனில் கலாய்த்த பா.ஜ.க நிர்வாகி

பாஜக கூட்டம் காக்கா கூட்டம் என்றும் அதிமுகவினர் மீது துரும்பு விழுந்தாலும் தூணைக் கொண்டு எரிவோம் என்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் போனில் பேசிய பாஜக நிர்வாகி, “மீனாட்சி அம்மன் கோவிலில் திருநீறு கடை வச்சவர்தானே நீங்க…” என்று வஞ்சப் புகழ்ச்சியாக கலாய்த்துள்ளார்.

அண்மையில், பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல, பாஜக இரட்டை வேடம்போடுகிறது என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் விமர்சித்திருந்தார். இது பாஜகவினர் மத்தியில் கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, பொன்னையனுக்கு பாஜகவையோ பாஜக தலைவர் அண்ணாமலையையோ விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை என்று கூறினார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்னையன், ஜெயக்குமார் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து, பாஜக குறித்து பொன்னையன் கூறியது அவருடைய சொந்த கருத்து என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “வி.பி. துரைசாமி அதிமுகவினரை விமர்சிக்கலாமா? பாஜகவுக்கு கூடிய கூட்டம் காக்க கூட்டம் இரை போட்டால் கூடும்…. பிறகு கலைந்துபோய்விடும்…. அதிமுக கொள்கைக் கூட்டம். எங்கள் மீது யாராவது துரும்பைக் கொண்டு எரிந்தாலும் நாங்கள் தூணைக் கொண்டு எரிவோம்” என்று கூறினார். மேலும், அதிமுக தனித்து போட்டியிடத் தயார். அதே போல மற்ற கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவோம் என்று சொல்லத் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

செல்லூர் ராஜூவின் கருத்து பாஜகவினர் மத்தியில், சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், செல்லூர் ராஜுவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார், செல்லூர் ராஜுவை கடுமையாக வஞ்சப் புகழ்ச்சியில் சாடியுள்ளார். “அரசியலுக்கு வருவதற்கு முன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருநீறு விற்றீர்கள்தானே?” என்று சுரேஷ்குமார் கேட்க, செல்லூர் ராஜு பிரசாதம் விற்றேன் என பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சுரேஷ், “அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி, நீங்கள் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஆளு, என்னென்ன சாதனை செய்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், வைகை ஆற்றில் தெர்மாக்கோல் விட்டு தமிழ்நாட்டையே அலறி விட்டவர். நீங்கள் அவ்வளவு பெரிய விஞ்ஞானி.” என்று வஞ்சப் புகழ்ச்சியில் விமர்சித்துள்ளார். இது அனைத்தையும் கோபப்படாமல் செல்லூர் ராஜு அமைதியாக கேட்கும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அதிமுகவில் செல்லூர் ராஜூ, பொன்னையன் போன்றவர்களின் கருத்துக்கு யாரும் ஊடகங்களில் பதில் அளிக்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp functionary teasing aiadmk former minister sellur raju for criticise bjp

Best of Express