மதம் சாதி பற்றி பேச அரசியல் கட்சிகள் உள்ளன.மனிதன் பற்றி பேச நாம் மட்டுமே உள்ளோம் என நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழகர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
Advertisment
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் கூறுகையில்,
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனிமவளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய அரசு பொறுப்பற்று இருக்கிறது. அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குமரியில் மலைகள் உடைக்கப்பட்டு கேரள மாநிலத்திற்கு தினம் நூற்றுக்கணக்கான, கனரக வாகனங்களில் கொண்டு செல்வதால் குமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் பயணிப்பதால் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே தான் நாகர்கோவில் நாகராஜா திடலில் மண்வளமே மக்கள் நலம் என நாம் கூடி பேசுகிறோம்.
குமரி மாவட்டம் சுவாமி தோப்பில் பிறந்த புரட்சியாளர் வைகுண்டர் 'தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம்' என கூறினார். ஐயா மார்சல்நேசமணி இந்த குமரி மண்ணை மீட்க போராடி வெற்றி கண்டார். கேராளாவிலும் மலை இருக்கிறது.ஆனால் அங்குள்ள எவரும் மலை வளத்தை சேதப்படுத்தாது தலைமுறை,தலைமுறையாக பாதுகாத்து பின்வரும் சமுகத்தின் நலம் காப்பதில் பாதுகாவலனாக இருக்கிறார்கள். கேரள மக்கள் அவர்களின் மண்ணையும்,மலையையும், இயற்கை வளத்தை நேசிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மலை,நீர், காற்று நாசமானால் பரவாயில்லை இவர்களுக்கு பணம் ஒன்றே போதும் என நினைக்கிறார்கள்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்றைய பிரதமர் மோடி மீது என்ன கோபமோ.? அடுத்து மோடி பிரதமராக கூடாது என்ற ஆசையை நேரடியாக பொதுவெளியில் தெரிவிக்க முடியாததால் அடுத்த பிரதமர் தமிழர் என்கிறார். தமிழர்களில் ஒருவரை சுட்டி காட்டி இவர்தான் எங்களின் அடுத்த பிரதமர் வேட்பாளராக அடையாளம் காட்டினால் பாஜகவுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு கொடுப்போம்,ஓட்டு போடுகிறோம்.
தலைமைபதி குரு பாலஜனாதிபதியுடன் சீமான்
தமிழகத்தில் இப்போதைய புதிய காட்சி. சாராயம் குடித்து இறந்தால் ரூ10_லட்சம் கிடைக்கும் என்பதால் நிறைய பேர் சாராயம் குடிக்கிறார்கள். குமரி மாவட்டம் காற்றாலை மின் உற்பத்திக்கு ஏற்ற இடம், இயற்கை தந்துள்ள பெரும்கொடை காற்றாலை மூலம், கடல் அலை மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்.காற்றாலை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தை அதானிக்கு கொடுத்துள்ளனர். நாட்டை நாசமாக்கும் அணுஉலை, அனல்மின் உற்பத்தியை அரசு அதன் வசம் வைத்துள்ளது. கல்வி, உயிர் காக்கும் மருத்துவம், தண்ணீர் ஆகியவற்றை தனியார் கைகளில் உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியால் நாட்டுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக இயல்பு நிலையில் இல்லை. இப்போது செந்தில் பாலாஜி இயல்பு நிலையில் இல்லாமல் இருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனை நடத்துகிறார்களாம். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழலுக்கு இப்போது சோதனைக்கு சென்று உள்ளனர். இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் இனத்தின் எதிரி, பாஜக மனித குலத்தின் எதிரி என தெரிவித்த சீமான் அடுத்து வரும் மக்களவை தேர்தலில் எங்களுக்கு வாக்கு தாருங்கள் என கேட்டு அவரது பேச்சை நிறைவு செய்தார் நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு முன்பாக சீமான் சுவாமி தோப்பில் உள்ள அய்யா வழி தலைமை பதிக்கு சென்றார். தலைமைபதி குரு பாலஜனாதிபதி சீமானுக்கு தலைப்பாகை அணிவித்து நெற்றியில் நாமமிட்டு வரவேற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“