தமிழகத்தில் ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுகவில் தற்போது முதல்வராக இருக்கும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று சில மாதங்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தால் அறிவிக்கப்பட்டார். ஆனால், அதிமுகவின் கூட்டணி கட்சியான மத்தியில் ஆளும் பாஜகவின் மாநில தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும் என்று தெரிவித்ததால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கவிழாவில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரிய ஆளுமைகள் மறைந்ததால் சில கருங்காலிகள், தேசியக் கட்சிகள் இந்த சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றனர் கடுமையாகப் பேசினார்.
இதனால், அதிமுக - பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் வெற்றிக்குப் பின் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுதான் கூடி முடிவெடுக்கும்.”என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சி.டி.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) தமிழ்நாட்டில் அதிமுகதான் மிகப்பெரிய கூட்டணி கட்சி. மிகப்பெரிய கூட்டணி கட்சியில் இருந்துதான் முத்ல்வர் இருப்பார் என்பது இயல்பானது.
தற்போது, முதல்வர் பழனிசாமி நம்முடைய முதல்வராக இருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் என்.டி.ஏ ஒருங்கிணைப்புக் குழு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான், என்.டி.ஏ-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தெரியவரும் என்று தெளிவாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் பல திட்டங்களைத் தொடங்கிவைக்க மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"