பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், கடந்த ஆண்டு ஜனவரியில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து பேசியதாக புகார்கள் எழுந்தன. கல்யாணராமனின் சர்ச்சை கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இஸ்லாமியார்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர்.
மேலும், பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்ததை அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்றம் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கொபிநாத் என்பவர் அளித்த புகாரின் பேரில், கல்யாணராமன் இரு குழுக்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி கல்யாணராமனை கைது செய்தனர். மேலும், அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, கல்யாணராமனின் மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை உயர் நிதிமன்றத்தில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"