தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த ஏப்.6-ம் தேதி தாம்பரம் வழியாக சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் எடுத்துச் செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் இருந்து ரூ.3.98 கோடி பணம் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் பணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி வருகின்றனர். பா.ஜ.க. மாநில பொருளாளர் சேகர், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், நீல முரளி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் வழங்கிய சம்மனை ரத்து செய்யக் கோரி தமிழக பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், எந்தக் காரணமும் இல்லாமல் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி சி.சரவணன் முன்பு கேசவ விநாயகத்தின் மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“