தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் பாஜக ஒரு போதும் வெற்றி பெறாது தாமரை மலராது என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் வரலாறு மாறியது. பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர்.
தேர்தலுக்கு முன் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அப்போதைய பாஜக தலைவர் எல் முருகன், சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். இது பாஜகவினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியது.
பாஜக எத்தனை தொகுதியில் வெற்றி பெறும், எத்தனை மாவட்டங்களுக்கு இனோவா கார் வழங்கப்படும் என கேட்டபோது வெற்றி பெறும் அனைத்து மாவட்டங்களுக்கும் இனோவா கார் உறுதியாக வழங்கப்படும் என்று எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெற்றி பெற்ற மாவட்டங்களான ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கு கார் வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு மாவட்ட தலைவர்களுக்கு புதிய இனோவா காரை பரிசாக வழங்குகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil