க.சண்முகவடிவேல்
திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக, இந்து அமைப்புக்களின் நிர்வாகிகள் வீடு வாகனங்கள் தாக்குதலுக்கு ஆளாகிறது. இதுபோன்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இச்செயல்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் என்.ஐ.ஏ தவறுதலாக பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. என்.ஐ.ஏ சோதனை தேசத்தின் பாதுகாப்பு கருதி சரியான ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெற்றது. ஆனால் அந்த சோதனையை ஓட்டு வங்கி அரசியலுக்காக திமுக பயன்படுத்துகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். அது குறித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக் கொள்ளப்படவில்லை. எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்றுதான் ஜே.பிநட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் சென்னைக்கு மாற்றப்படாது. அதுபோன்ற எண்ணம் இல்லை. அது வதந்தி” என்று தெரிவித்தார்.
திமுகவின் ஆ.ராசா இந்துக்கள் பற்றி பேசியது குறித்த கேள்விக்கு; “ஆ.ராசா பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்து மக்களை ஆ.ராசா அவமதித்ததை மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள். ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி பேச்சாளர்கள் இது போன்று பேசுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. திமுக இந்து மக்களை இது போன்று தொடர்ந்து அவமான படுத்தும் வகையில் ஈடுபட்டு வருவது முறையல்ல எனவும் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி பயணம் குறித்து கேள்வி கேட்டதற்கு: ராகுல் காந்தி நடைபயணம் ஆரம்பக்கட்டத்திலேயே தோல்வி அடைந்துள்ளது. அவர் இந்த பயணத்தை தொடங்கிய போதே கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி விட்டது, அவர் காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.
பாஜக சார்பில் நாம் வேல் யாத்திரை செய்தபோது, அச்சத்தில் தற்போதைய முதல்வர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அதை நடக்கவிடாமல் செய்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன், துணைத் தலைவர் ஜெயகர்ண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil