தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேல் யாத்திரைக்கு தடை விதித்துள்ள நிலையில், பாஜக தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையைத் தொடங்கியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அரை மணி நேரம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் அரைமணி நேரம் சிக்கித் தவித்தது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரையை அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தடையை மீறி நவம்பர் 6ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கியதால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். எல்.முருகன் உள்பட 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் தடையை மீறி இன்றும் வேல் யாத்திரையை தொடங்க முயன்றார். வேல் யாத்திரையை தொடங்க முயன்ற எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கைது செய்யப்பட்டனர்.
எல்.முருகன் உடன் பாஜகவினர் பலரும் வேல் யாத்திரையை தொடங்க வாகனங்களில் சென்றதால், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக அவசரமாக வந்த ஆம்புலன் போக்கு வரத்து நெரிசலில் சிக்கொண்டு செல்ல முடியாமல் தவித்தது. இதனால், ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தை எழுப்பியபடியே இருந்தது. ஆனாலும், வேல் யாத்திரையால் ஏற்பட்ட போக்குரவத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் அரை மணி நேரம் நகர முடியாமல் போனது. பின்னர், போக்குவரத்து நெரிசல் சீரான பிறகு, ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.
வேல்யாத்திரையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஆம்புலன்ஸ் ஒன்று அரை மணி நேரம் நெரிசலில் சிக்கி தவித்தது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வீடியோவுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
வேல் யாத்திரை நடத்துவது தனது அரசியலமைப்பு உரிமை என்று கூறிய எல்.முருகன், இன்று காலை சென்னையில் யாத்திரையைத் தொடங்க முயன்றபோது, கைது செய்யப்பட்டார். மேலும், எல்.முருகன் கூறுகையில், “பிற கட்சிகள் ஊர்வலங்களை நடத்துவதற்கும் போராட்டங்களை நடத்துவதற்கும் மாநில அரசு அனுமதிக்கிறது. இது எனது அரசியலமைப்பு உரிமை” என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அதே போல, சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து 2வது நாளாக வேல் யாத்திரையை தொடரவிருந்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"