தமிழகத்தில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், தி.மு.க கூட்டணி வைக்காமல் போட்டியிடத் தயாரா என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலினிடம், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வை பா.ஜ.க.,வின் மாநில பிரிவு பல்வேறு பிரச்சனைகளில் தாக்கி வருகிறது. எதிர்காலத்தில் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் அமைப்பாக உருவெடுக்கும் பா.ஜ.க.,வின் முயற்சிகள் குறித்து உங்கள் பார்வை என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் பாஜக தனித்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், “நாங்களோ, தமிழக மக்களோ பா.ஜ.க.,வை தமிழகத்தில் முதன்மை எதிர்க்கட்சியாக பார்க்கவில்லை. 2001 மாநில சட்டமன்றத் தேர்தலில், அக்கட்சி தி.மு.க.,வின் தோளில் ஏறி நான்கு எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அ.தி.மு.க.,வின் முதுகில் சவாரி செய்து, 2021ல் மீண்டும் நான்கு எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.,வின் பலம் இதுதான். அவர்களால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட தனித்து வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க.,வைக் கட்டுப்படுத்தி பா.ஜ.க வளர முயற்சிக்கிறது. இது தவறான ஒன்றாகும். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சி அடையவில்லை. அப்படியொரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது,” என்று கூறினார்.
இந்தநிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க தனித்துப் போட்டியிடத் தயாரா என சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 1967 ஆம் ஆண்டு, தி.மு.க முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சி.பி.எம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாக. 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.
1967லிருந்து, தி.மு.க ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு திரு ஸ்டாலின் அவர்களே.
யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் திரு ஸ்டாலின். துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில், பா.ஜ.க 2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும்.
பா.ஜ.க கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் திரு ஸ்டாலின். கூட்டணி இல்லாமல் போட்டியிட தி.மு.க தயாரா? எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil