BJP leader Annamalai meets OPS and EPS separately: அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிறைவு பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடியை சந்தித்து பேசினர்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினர்.
இதையும் படியுங்கள்: முகத்திற்கு நேராக ஓ.பி.எஸ்-ஐ நோகடித்த சீனியர்கள்: அ.தி.மு.க பொதுக் குழு ஹைலைட்ஸ்
பா.ஜ.க தலைவர்கள், சென்னை கீரின்வேஸ் சாலை அமைந்துள்ள ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் வீடுகளுக்கு சென்று தனித்தனியாக இருவரையும் சந்தித்தனர். இதில் இ.பி.எஸ் உடனான சந்திப்பின் போது அதிமுக மூத்த தலைவர்கள் தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி, நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாஜக அறிவித்துள்ள வேட்பாளருக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்க கோரி, ஓ.பிஎஸ் மற்றும் இபிஎஸ்-இடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பா.ஜ.க மேலிடம் சார்பாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோரைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திருமதி திரௌபதி முர்மு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது கலந்துகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொண்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் எந்த வித முடிவும் இல்லாமல் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-ஐ பா.ஜ.க தலைவர்கள் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil