தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியினருடன், இன்று (டிசம்பர் 12) தமிழக ஆளுநரைச் சந்தித்து, பாஜகவினர் மீதான திமுக அரசின் சட்டவிரோத வழக்குகள் குறித்து அறிக்கை அளித்துள்ளார்.
சமீபத்தில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத்தளபதி, அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தனது கருத்தை வெளியிட்ட மாரிதாஸ், திக திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி (emoji) போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு வைரலாகி பரவியதை தொடர்ந்து அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். பாஜகவுக்கு ஆதரவான மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தொண்டர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகினறனர்.
இந்தநிலையில் மோசடி வழக்கிலும் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கையாளர் அளித்த மோசடி புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாரிதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் மாரிதாஸ் மீது குண்டர் சட்டம்… தயாராகிறதா தமிழக அரசு என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுகவின் காவல்துறை, 124 ஏ சட்டப்பிரிவில் மாரிதாஸ் மேல் வழக்கு தொடுக்கின்றனர். திமுகவினர் ராணுவ அதிகாரி இறந்தப்போது, பிபின் ராவத்தை கொன்றவர் யார்? என்றும் ராணுவத்தைக் கேலி செய்தும் , திமுகவின் ஊடகப்பிரிவினரும் திமுகவின் நிர்வாகிகளும் வெளியிட்ட அந்த 300க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளின் பதிவு எங்களிடம் இருக்கிறது.
திக அல்லது திமுகவினர் அவதூறு பரப்பினால் காவல்துறை தன் கண்களை மூடிக் கொள்கிறது. ஆனால் ஒரு தேசியவாதி கருத்துச் சுதந்திரத்துடன் தவறை சுட்டிக்காட்ட விரும்பினால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது. திமுக அவதூறு பரப்பியதற்கு நான் ஆதாரம் தருகிறேன். நடுநிலையாக அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடுக்க மாநில அரசு தயாரா?
தமிழக டிஜிபியின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக மாறிப் போனது. ராணுவத்தின் உயர் அதிகாரி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை கிண்டல் செய்து ட்விட்டரில் செய்திகள் வெளியிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா டிஜிபி. அந்த செய்திகளெல்லாம் அவர் கண்ணில் படவில்லையா?
ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது கம்ப்ளைண்ட் கொடுத்தது யார்? அரசு அதிகாரியா? அல்லது காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிந்ததா? திமுகவின் ஊடகப் பிரிவில் இருப்பவர்களின் புகார்களை கையிலெடுத்து மாரிதாஸ், கல்யாணராமன் போன்றோரையெல்லாம் கைது செய்து ஆளும் கட்சியின் ஏவலராக போலீஸ் செயல்படுகிறது.
மாரிதாஸை விசாரித்த நீதிபதி போலீசிடம் கேட்டதென்ன… இதெல்லாம் ஒரு கேஸா… பேச்சு எழுத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறதா என்று நீதிபதி எதிர் கேள்வி கேட்டுள்ளார். மாரிதாஸ் போட்ட செய்தியில் என்ன தவறு இருக்கிறது.
திமுகவினர் ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும். சிஆர்பிசி சட்டம் தமிழகத்திற்கு மட்டுமான சட்டமல்ல… பாஜக 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் இந்தச் சட்டம் செல்லும். முன்னுதாரணமாக நீங்களே மாரிதாஸ் மீதும் குண்டர் சட்டத்தை ஏவி இருக்கிறீர்கள். இதை திமுகவினருக்கு நான் ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. இதை எல்லாம் பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுருந்தார்.
இந்தநிலையில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது, யூடியூபர் மாரிதாஸ் போன்றவர்களின் கைது விவகாரம் குறித்து, தமிழக பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், மாரிதாஸ் உள்ளிட்டவர்களை மட்டும் கைதுசெய்யும் அரசு, அதேபோன்ற கருத்துகளை பதிவிட்ட பிறரை ஏன் கைது செய்யவில்லை? முப்படைகளின் தலைமை தளபதி விபத்தில் இறந்ததை கொண்டாடும் விதமாக பதிவிட்ட 300 பேரின் கருத்துகள் அடங்கிய நகலை ஆளுநரிடம் அளித்துள்ளோம். திமுக ஆட்சியில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும், தேச தலைவர்களை, தேசத்தை தவறாக பதிவிடும் பதிவுகளை பாஜக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிவித்த அவர், இந்திய தேசத்தை குறைகூறி பதிவிடுவோருக்கு திமுக தலைவர்கள் ஆதரவாக பதிவுகளை இடுவதாக குற்றஞ்சாட்டினார். பாஜகவின் 21 நிர்வாகிகள் மீது திமுக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டு பாஜகவினரை திமுக அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது எனவும், பாஜக அளித்த ஆதரங்களின் அடிப்படையில் டிஜிபிக்கு உத்தரவிட ஆளுநரை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் சந்திப்புக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர்களுடன் சந்தித்தேன். பாஜகவின் சமூக வலைத்தளத் தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக் கொண்டும் இருக்கும் திமுக அரசின் போக்கைக் கண்டித்து அறிக்கையாக சமர்பித்தோம், என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.