தமிழக அரசு எழுதிக் கொடுத்தால், தேயிலை நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த தயாராக உள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
இதையும் படியுங்கள்: மாடுகளை ஏலம் விட எதிர்ப்பு; நெல்லை மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது
அப்போது அண்ணாமலை பேசியதாவது, 30 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. 250 ரூபாயில் ஒரு மனிதன் எப்படி இலங்கை தோட்டத்தில் வசிக்க முடியும்? இன்னும், அவர்களுக்கு அந்த கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்ற உடனே அங்கு வசிக்கும் மலைவாழ் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். மேலும், வடக்குப் பகுதியில் இருக்கின்ற தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். இதையெல்லாம் செய்து கொடுத்த பிரதமர் மோடியின் கட்சியிலிருந்து நாங்கள் பேசுகிறோம். பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.
இப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சொல்வது, டேன்டீ வேண்டாம் என்று சொல்லுங்கள். நாங்கள் அதை எடுத்துக் கொள்கிறோம். அது எங்களுடைய பொறுப்பு. எழுத்துபூர்வமாக தமிழக முதல்வர் டேன்டீ எங்களுக்கு வேண்டாம், இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசே இந்த நிறுவனத்தை நடத்துங்கள் என்று எழுதி தந்தால், நாங்கள் தயார். டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு தயார்.
இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகம் வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலைவாழ் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக திராவிடக் கட்சிகள் நடத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் அண்டை நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு 60 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.
எந்த ஒரு கட்சியிலே அடிப்படையாக இருக்கிற சுய ஒழுக்கம் இல்லையே அந்த கட்சி ரொம்ப நாள் நீடிக்காது. தி.மு.க.,வின் முடிவு ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil