Advertisment

சமூகங்கள் இடையே ஜாதி வெறியைத் தூண்டி பலனடைந்து வரும் கட்சி தி.மு.க – அண்ணாமலை காட்டம்

தி.மு.க வளர்த்து வரும் இந்த விஷச் செடி, எம் தமிழக மக்களால் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Tamilnadu

தி.மு.க வளர்த்து வரும் இந்த விஷச் செடி, எம் தமிழக மக்களால் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்? என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

நாங்குநேரி சாதி வன்முறையை அடுத்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினைகள் காரணமாக பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் சமூக மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பள்ளி மாணவர்களிடையே ஜாதி வேறுபாடுகள் அதிகரித்து வருவது, ஆயுதங்கள் கொண்டு தாக்குவது, எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது.

இதையும் படியுங்கள்: நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலி; கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து ஸ்டாலின் உத்தரவு

மாணவர் சின்னதுரை, நன்றாகப் படிக்கும் மாணவர் என்றும், ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றவர் என்றும் அறிகிறேன். சிறந்த மாணவராக, வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வரும் வாய்ப்புள்ள மாணவர் ஒருவர், ஜாதிய வன்முறையால் முடக்கப்படுவதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறது. அற்ப அரசியல் லாபங்களுக்காக வேறு வேறு சமூகங்களிடையே ஜாதி வெறியைத் தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாகப் பலனடைந்து வரும் கட்சி, தி.மு.க என்பதை அனைவரும் அறிவர்.

இந்தச் சம்பவத்திலும், தி.மு.க கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் காவல்துறையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் வாக்குகளுக்காக சமூகத்தில் ஜாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க.,வின் செயல்பாடுகளின் விளைவுதான், இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தி.மு.க.,வின் ஆரம்ப கால உறுப்பினராகவும், மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியில் இருந்து மறைந்த சத்தியவாணி முத்து அவர்கள், தி.மு.க தலைமை ஜாதியப் பாகுபாடு காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு இன்று வரை அப்படியே தொடர்கிறது என்பது அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. தி.மு.க கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும், தி.மு.க அமைச்சர்கள் சமூக மக்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்துவது, செய்திகளுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களே, சமூக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவரை ஜாதியின் பெயரைச் சொல்லி அழைத்த அமைச்சர் பொன்முடி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? சமூக ஊராட்சி மன்ற பெண் தலைவரைப் பட்டியல், தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்து, அமர்வதற்கு நாற்காலி கூடக் கொடுக்காமல் அவமானப்படுத்திய உங்கள் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியானது நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்ன ஆர்.எஸ்.பாரதி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த உங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட நாற்காலி கொடுக்காமல் நிற்க வைத்த உங்கள் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, வேங்கைவயல் சம்பவம் நடந்து 200 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நீங்கள், குற்றவாளியைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு, பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் வழங்கும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பி வருகிறீர்கள். இதுவரை பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் ஒரு படி மேலாக, பட்டியல் சமூக மக்களுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பட்டியல் சமூக மக்களுக்கான அடிப்படை வசதிகளோ, பட்டியல் சமூக மாணவர்களுக்கு, சரியான பள்ளி வசதிகளோ, விடுதி வசதிகளோ அல்லது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்டஈடு தொகையோ, அந்த நிதியிலிருந்து வழங்க உங்களுக்கு மனம் வரவில்லை.

யாரை ஏமாற்ற இந்த சமூகநீதி நாடகமாடிக் கொண்டிருக்கிறீர்கள்? தேர்தல் நேரத்தில், வெறும் போட்டோ எடுத்து ஏமாற்ற மட்டும்தான் உங்கள் பட்டியலில் சமூக மக்கள் மீது அக்கறை வருமா?

மாணவர் சின்னதுரையின் கல்விப் பொறுப்பை, தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ். வரவேற்கிறேன். ஆனால், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது அல்லவா மாநில அரசின் கடமை? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்? தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடிகிறது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஏன் தடுக்க முடியவில்லை? அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டு. ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் தடம் புரள்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். பத்தாயிரம் சிதிலமைடைந்த அரசுப் பள்ளிக் கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்று சொல்லி ஆண்டு இரண்டு ஆகிறது. ஏழை மாணவர்கள் மீது அக்கறை இருந்தால்தானே செயல்படுத்தத் தோன்றும்?

தி.மு.க ஆட்சியின் அவலங்கள் அனைத்திற்கும் யார் மீதோ பழிபோட்டு மடைமாற்றிக் கொண்டிருக்கும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களே. உடைந்த பழைய நாற்காலி, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேண்டுமானால் போதுமான சமூக நீதியாக இருக்கலாம். ஆனால், உங்களையும் தலைவர் என்று பின்தொடரும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இதன் மூலம் நீங்கள் கொடுக்கும் செய்தி என்ன? இப்படி தி.மு.க.,வின் சமூகநீதிக்கெதிரான செயல்கள் அனைத்தையும் மடைமாற்றுவதால் உங்களுக்கு பலன்தான் என்ன? ஏன் உங்கள் கட்சியினரையும், மக்களையும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் உச்சஸ்தாயில் குரல் கொடுக்கும் நீங்கள், தமிழகத்தில் தோழமை சுட்டக் கூடப் பேச்சு வராமல் முடங்கிப் போய் விட்டீர்களே. உங்கள் தனிப்பட்ட நலனுக்காக, தமிழகத்தின் ஒரு பெரும் சமூகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குப் பலி கொடுக்கப் போகிறீர்கள்?

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களே, வெறுப்பில் பிறந்து, எழுபது ஆண்டுகளாக தமிழகத்தில் வெறுப்பை மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கும் உங்கள் கட்சி, தற்போது விதைத்துக் கொண்டிருப்பது, சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கும் ஜாதியப் பாகுபாடு என்னும் விஷ விதை. உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வளர்த்து வரும் இந்த விஷச் செடி, எம் தமிழக மக்களால் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அண்ணாமலை காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Bjp Dmk Stalin Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment