scorecardresearch

அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்; இ.பி.எஸ் கொதிப்பு… ஆளுனர் அட்டாக் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

ஆளுநர் வாகனம் தாக்கப்பட்ட விவகாரத்தில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என ஈபிஎஸ் கண்டனம்; அமித் ஷா தலையிடக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்

அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்; இ.பி.எஸ் கொதிப்பு… ஆளுனர் அட்டாக் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

BJP leader Annamalai wrote letter to Amit shah on Governor convoy attack issue: தமிழக ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் ஞானரத யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார்.

இதனிடையே நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்று கூறி என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தின் போது ஆளுநர் வாகனம் மீது கருப்பு கொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுரி ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். தமிழகத்திலேயே, மேதகு தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் ஏற்காது என்பதோடு, கழகத்தின் சார்பில் இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்? என கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஆளுனர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாகனம் சென்ற போது ஆளுநரின் வாகனம் மீது திமுகவை சார்ந்தவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கல்லை எரிந்து, கருப்புக் கொடியை வீசியிருக்கிறார். தமிழக முதல்வரால் ஆளுநருக்கு கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை. இந்த நிலையில் பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். தினமும் கொலை, பாலியல் வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர் கெட்டுள்ளது.

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை கட்டிக் கொண்டு தனது கட்சி சித்தாந்தத்தோடு மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளார். ஆளுநர் மீது தி.மு.க. தொண்டர்கள் எதேச்சையாக தாக்குதல் நடத்தவில்லை. தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே தாக்குதல் நடந்துள்ளது. ஆளுநர் உயிருக்கு ஆபத்து என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. முதலமைச்சர் இன்று மாலைக்குள் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.

அநாகரீகமாக நடத்தப்படும் இந்த தாக்குதல்களை எதிர்த்து கலவரத்தை உருவாக்குவதற்கு பாஜக விரும்பவில்லை. ஆளுநரின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது. அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று கடிதம் எழுதப் போகிறோம். உடனடியாக உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும். இது தொடர்பாக, டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று கூறினார்.

இந்தநிலையில், ஆளுநர் வாகனம் தாக்கப்பட்ட நிகழ்வு குறித்து, நடந்த விவரங்களை கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, மயிலாடுதுறையில் கவர்னரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசிதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக காவல்துறை தரப்பில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்பு 3 அடுக்கு இரும்புத் தடுப்பு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. கவர்னரின் கான்வாய் சென்ற நிலையில் கருப்புக் கொடிகளை அவர்கள் வீசியெறிந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும் கைது செய்து வாகனத்தில் ஏற்றியதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp leader annamalai wrote letter to amit shah on governor convoy attack issue