பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறிய நிலையில், “மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. இந்த 8 மாதங்களில் என்ன நடக்கும் என்று எதுவும் சொல்ல முடியாது. அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.” பா.ஜ.க மேலிட நிர்வாகி சி.டி. ரவி கூறினார்.
சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்வதாக அதிகாரப் பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி, கூட்டணி முறிந்தது என அறிவித்த சில மணி நேரங்களிலேயே, தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, 'கே.அண்ணாமலை தலைமையில் மாபெரும் வளர்ச்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க-வை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது என்று அண்ணாமலையிஐப் பாராட்டினார்.
பா.ஜ.க தலைவர் சி.டி.ரவி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன, இந்த 8 மாதங்களில் என்ன நடக்கும் என்று இன்று எதுவும் சொல்ல முடியாது. கட்சியை பலப்படுத்துவது ஒவ்வொரு தொண்டர்களின் கடமை. அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.” என்று கூறினார்.
1956-ல் அண்ணாதுரை மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்து மதத்திற்கு எதிராக விமர்சனக் கருத்து தெரிவித்ததாகவும், அதற்கு சுதந்திரப் போராட்ட வீரரும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடுமையாக எதிர்த்ததாகவும், அண்ணாவும் பி.டி. ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிப் போனார்கள் என்றும் தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையானது.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு, தி.மு.க மட்டுமல்லாமல், அண்ணாவின் பெயரில் அமைந்த அ.தி.மு.க-வின் தலைவர்கள் கடுமையான எதிர்வினையாற்றினார்கள். அண்ணாமலை அரசியல் தலைவராக இருக்கவே தகுதியற்றவர். அவருடைய கூட்டணி தர்மத்தை மீறுவதாக உள்ளது. அண்ணா குறித்த பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அ.தி.மு.க மூத்த தலைவர் டி. ஜெயக்குமார் கடுமையாக எதிர்வினையாற்றினார். அதோடு, பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர்கள் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து, அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையின் கூட்டணி தர்மத்தை மீறிய அரசியல் பேச்சுகளால் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து தெரிவித்தனர்.
அப்போது அண்ணா குறித்த பேசியதற்கு, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை பா.ஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்த சூழ்நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, அ.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான கே.பி. முனுசாமி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து, ஒத்த கருத்துள்ள கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தும் தீர்மானத்தை அக்கட்சி ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது என்று கூறினார்.
கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பா.ஜ.க தலைமை கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க மீதும், அண்ணா, ஜெயலலிதா மீது அவதூறாகப் பேசி, கொள்கைகளை விமர்சித்து வருகிறது. மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பா.ஜ.க மாநிலத் தலைமை விமர்சித்தது தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதனால், அ.தி.மு.க இன்று முதல் பா.ஜ.க-வில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்ற கூட்டணியோடு, இணைந்து அ.தி.மு.க தேர்தலை சந்திக்கும். 100-க்கு 100 சதவீதம் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு, பா.ஜ.க உடன் கூட்டணி இன்றைக்கும் இல்லை என்றைக்கும் இல்லை.” என்று கூறினார்.
அ.தி.மு.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து, பா.ஜ.க தலைமை பதில் சொல்லும் என்று அண்ணாமலை கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்த அ.தி.மு.க தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்க அண்ணாமலை திங்கள்கிழமை மறுத்துவிட்டார்.
அ.தி.மு.க பா.ஜ.க உடன் கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து, 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் போது, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அண்ணாமலை, “நான் உங்களுடன் பிறகு பேசுகிறேன். யாத்திரையின் போது நான் பேசமாட்டேன். பிறகு பேசுகிறேன்” என்று அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.