திமுகவும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா திருப்பூர் வித்யாலயம் பகுதியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும், திருநெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்ட அலுவலகங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘‘பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைய வேண்டும். 2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும். வரும் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற இந்த அலுவலக கட்டிடங்கள் நமக்கு பயன்படும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “வீரவேல், வெற்றிவேல்” என்ற முழக்கங்களுடன் தனது உரையைத் தொடங்கினார். பின்னர் பேசிய நட்டா, பழமை வாய்ந்த தமிழ் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டான இங்கு இருப்பதில் மகிழ்ச்சி. திருவள்ளூவர் வாழ்ந்த பூமியை வணங்குகிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் வார்த்தைகளை கொண்ட கலாச்சாரத்தின் அடையாளமான தமிழகத்திற்கு வந்துள்ளேன்.
திமுக என்றால் ஊழல் கட்சி. ஊழலை திட்டமிட்டு திமுக செய்கிறது. திமுகவும் ஊழலும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். குடும்பத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், திமுகவில் வேறு யாரும் முன்னுக்கு வரமுடியாது. வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது. ஆனால் பாஜகவில் அப்படி இல்லை. இங்கு மேடையில் இருப்பவர்கள் எவ்வித பின்புலத்திலும் இல்லாதவர்கள்.
பிரதமர் மோடி, வளர்ச்சியை மட்டும் மனதில் வைத்துள்ளார். விளிம்பு நிலை மக்களை மோடி முன்னேற்ற நினைக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூரில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு இருந்தது. ஜல்ஜீவன் திட்டம் மூலம், இன்றைக்கு நிலைமை மாறி உள்ளது.
மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் கீழ் 94 லட்சம் வங்கிக் கணக்குகளையும், உஜ்வாலா யோஜனாவின் கீழ் 32 லட்சம் எல்பிஜி இணைப்புகளையும், ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் எட்டு லட்சம் கழிப்பறைகளையும் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
பாஜகவின் அலுவலகத் திறப்பு மூலம் நாம் நம் இயக்கத்தை வலுவாக்குகிறோம். மற்ற கட்சிகள் அலுவலகங்களை வீட்டில் நடத்துகின்றன. நாம் அலுவலகத்தில் நடத்துகிறோம். குடும்பம் போனால், கட்சி மற்றும் அலுவலகமும் காணாமல் போகும். மோடியின் தொலைநோக்கு பார்வையால் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்த கட்டிடங்களே சாட்சி. கட்சியின் சித்தாந்தத்தை வலுப்படுத்த, ஊழல் இல்லாத குடும்ப அரசியல் இல்லாத ஒரு ஆட்சியாக இருக்க இந்த அலுவலக கட்டிடங்களை நாம் பயன்படுத்த வேண்டும். பாஜக அலுவலகங்கள் 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் செயல்படும். கட்சியில் தொண்டர்களை பாஜக முதலிடத்தில் வைத்து உள்ளது. இவ்வாறு நட்டா பேசினார்.
இந்த விழாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக பொறுப்பாளர்கள் சி.டிரவி, சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil