Advertisment

ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை கண்டிக்க உதயநிதிக்கு தகுதி இல்லை: பா.ஜ.க தாக்கு

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பியதைக் கண்டிக்க அமைச்சர் உதயநிதிக்கு தகுதி இல்லை என்று  பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Narayanan Thirupathy Udhayanidhi

ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை கண்டிக்க உதயநிதிக்கு தகுதி இல்லை: பா.ஜ.க தாக்கு

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், கண்டிக்க உதயநிதிக்கு தகுதி இல்லை என்று  பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி அஹமதாபாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது, அந்நாட்டு வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் சென்றபோது, ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ரசிகர்களின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக வீடியோவை பகிர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:

“விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறை  ஏற்க முடியாது. விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருகிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை  வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.   

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், கண்டிக்க உதயநிதிக்கு தகுதி இல்லை என்று  பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஜெய் ஸ்ரீராம்' - என்று இந்தியா - பாகிஸ்தான்  கிரிக்கெட் போட்டியில் இருந்த ரசிகர்கள் சொன்னது தவறானது, வெறுப்பானது என்றெல்லாம் கூறியிருக்கிறார் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள். ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். ராம ராஜ்ஜியம் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் கனவும் கூட. ரசிகர்களின், மக்களின் நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்க தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது தான். பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும் போது அந்த நாட்டில் உள்ள ரசிகர்கள் நம் நாட்டு விளையாட்டு வீரர்களை எப்படியெல்லாம் இழிவாக தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்கள்  என்பது உதயநிதிக்கு தெரியுமா? பாகிஸ்தானில் நம் நாட்டு வீரர்களை கற்களால் அடித்த நிகழ்வுகள்  உதயநிதிக்கு தெரியுமா? மற்றொரு நாட்டில், உன் அப்பா பெயர் என்ன? என்று நம் நாட்டு வீரர்களை என்று ரசிகர்கள் கேட்டபோது உதயநிதி எங்கிருந்தார்? 

நாசகார செயல்களில் ஈடுபடும் ஹமாஸ், ஐ எஸ் உள்ளிட்ட நம் நாட்டில் உள்ள இதர பயங்கரவாத இயக்கத்தினர் கூட அழிவுகளை ஏற்படுத்தும் போது ,'அல்லாஹு-அக்பர்' என்று சொல்வதை, அதாவது இறைவனே மிகப் பெரியவன் என்று சொல்வதை  உதயநிதி கேள்விப்பட்டிருக்கிறாரா? அது தவறில்லையா? ஒரு மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உதயநிதி கண்டிப்பாரா?

ரசிகர்கள் தங்களுக்கு எது உற்சாகத்தை கொடுக்குமோ அந்த கோஷங்களை எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் உரிமையில் தலையிட உதயநிதி யார்? அந்த ரசிகர்கள் மற்றொரு மதத்தை புண்படுத்தி பேசியிருந்தால் கண்டிப்பதில் நியாயம் உள்ளது. 

கோவையில் 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை 'முஸ்லிம்' கைதிகள் என்று மத ரீதியாக அடையாளப்படுத்தி பேசுபவர்கள், தங்களின் அணி வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்கு தங்களின் கடவுளை 'ஜெய் ஸ்ரீராம்' என்று போற்றி பாடுவதை கண்டிப்பதற்கு தகுதியில்லை. 

விளையாட்டு அமைச்சர் விளையாட்டில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நம்பிக்கைகளில் விளையாட வேண்டாம்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment