புதுக்கோட்டையில் ஒரு திருமண நிகழ்வில், பாஜகவில் மாநில துணை தலைவராக இருந்த பி.டி.அரசகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரை புகழ்ந்து பேசி சர்ச்சையான சில நாட்களுக்குள்ளாகவே அவர் இன்று திமுகவில் இணைந்தார்.
அண்மையில், புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய பி.டி.அரசகுமார், எம்.ஜி.ஆர்.க்குப் பிறகு தான் பார்த்து ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின்தான் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே இரவில் கூவத்தூர் விடுதிக்குள் புகுந்து முதல்வர் பதவியைத் தட்டிப் பறித்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. காரணம், அவர் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயகத்தின் வாயிலாகப் பெற வேண்டும் எனப் பொறுமையைக் கடைப்பிடித்து வருகிறார். அவர் முதல்வராகும் திருநாள் அரங்கேறப்போகிறது. காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். ஸ்டாலின் அரியணை ஏறுவார்” என்று பேசினார். பி.டி.அரசகுமாரின் இந்தப் பேச்சு தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் நயினார் நாகேந்திரன் அகில இந்தியத் தலைமைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், பி.டி.அரசகுமாரின் பேச்சு பாஜகவின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் மீறும் செயல். தேசிய தலைமையிலிருந்து தகவல் வரும் வரையிலும் அவர் எந்தவித பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளகூடாது” எனக் குறிப்பிட்டார். பாஜகவைச் சேர்ந்த பலரும் பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த பி.டி.அரசகுமார், “ஸ்டாலின் முதல்வர் ஆவார் என நான் பேசியது தொடர்பாக தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில பொறுப்பு தலைவர் கேசவர் விநாயகத்திடம் விளக்கம் அளித்துவிட்டேன். எனக்கு உத்தரவிடுவதற்கு மாநில செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு அதிகாரம் இல்லை” என்று கூறினார்.
இந்த நிலையில், பி.டி.அரசகுமார் வியாழக்கிழமை காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் நான் வெளிப்படுத்தினேன். ஸ்டாலின் குறித்து பேசியதற்காக, என் வாழ்நாளில் கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்டேன். மனம் சோர்ந்து இருந்த நேரத்தில் தற்போது தி.மு.க-வில் இணைந்துள்ளேன். இன்னும் சில காலத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமையும். அதற்காக நான் உழைப்பேன். பா.ஜ.க தேசிய தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை. தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ளேன்” என்று கூறினார்.