/indian-express-tamil/media/media_files/2025/07/18/tamilisai-kovai-kamarajar-2025-07-18-16-33-56.jpeg)
தி.மு.க.,வினர் மக்களை சந்தித்து பத்து நிமிடம் பேச வேண்டுமென ஸ்டாலின் சொல்கிறார். எத்தனை நிமிஷம் பேசினாலும் தி.மு.க.,வை மக்கள் நம்ப தயாராக இல்லை என கோவையில் .ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது; ”தமிழகத்தில் தி.மு.க அரசாங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யுமாறு தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் கூறியுள்ளார்,
மதுரையில் ஐந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் உடனே பதவி விலக வேண்டும். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என முதலமைச்சரே கூறியுள்ளார், அப்படி என்றால் இத்தனை நாள் கொள்ளை அடித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தானே அர்த்தம். எதுவுமே சரியாக நடக்கவில்லை என்பது முதலமைச்சரின் வாயில் இருந்தே வந்து கொண்டிருக்கிறது.
மணல் கடத்தல் இப்போது சிறுநீரக கடத்தல் ஆகியுள்ளது. தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் நடந்து வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு செய்தது நாமக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தி.மு.க கட்சியை சேர்ந்தவர் நடத்தும் பிரம்மாண்ட மருத்துவமனையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை விதிகளுக்கு மாற்றாக விதிகளை மீறி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளது.
இந்த நிலையில் தான் மக்களை சந்தித்து பத்து நிமிடம் பேச வேண்டுமென ஸ்டாலின் சொல்கிறார். எத்தனை நிமிஷம் பேசினாலும் தி.மு.க.,வை மக்கள் நம்ப தயாராக இல்லை.
காமராஜர் எனும் மாபெரும் தலைவரை இந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி உள்ளனர். திருச்சி சிவா பேசுவதை விட்டுவிட வேண்டும் என கேட்கிறாரே தவிர தப்பு என கூறவில்லை. முதலமைச்சரும் ஒரு தலைவரை களங்கப்படுத்தி விட்டனர் என கூறவில்லை. காமராஜர் குறித்த மதிப்பும் அக்கறையும் தி.மு.க.,வினருக்கு இல்லை.
காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்காக இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைவிட கேவலம் எதுவும் கிடையாது. ஒரு மாபெரும் தலைவரை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இணையதளவாசிகள் அவர் படுத்திருந்தபோது ஏசி இருந்த படம் என பதிவிட்டு வருகின்றனர். இது எல்லாம் வேதனை அளிக்கிறது. இதற்கு தி.மு.க.,வும் காங்கிரஸும் பதிலளித்து தான் ஆக வேண்டும்.
காமராஜர் குறித்து பேசுவதற்கு வேறு எதுவும் இல்லையா? அவருக்கு கடற்கரையில் சமாதி கட்டப்பட்டதா? ஒரு முதல்வராக இருந்து கொண்டு அதை கூட செய்யவில்லை என்றால் எப்படி? காமராஜர் எத்தனையோ பள்ளிகள், அணைகள் என பலவற்றை செய்துள்ளார் அதை சொல்வதற்கு என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.,விற்கும் பா.ஜ.க.,விற்கும் இடையே எந்த விரிசலும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி மிகத் தெளிவாக கூறிவிட்டார். அப்பட்டமான ஓட்டு அரசியலை தான் தி.மு.க செய்து வருகிறது.
மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், இடைக்கால ஆசிரியர்கள் என அனைவரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் பரப்பரைக்காக வீடுகளுக்கு வரும் தி.மு.க.,வினரிடம் பொதுமக்கள் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றியுள்ளதா என கேள்வி கேட்க வேண்டும்.
பா.ஜ.க கூட்டணி அரசு உள்ள மகாராஷ்டிராவில் 78 லட்சம் மகளிரை லட்சாதிபதியாக ஆக்கி உள்ளோம். அதுவே தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அந்த வீட்டில் உள்ள ஆண் மது குடிப்பதன் மூலம் அரசு ஆறாயிரம் ரூபாய் பிடுங்கி விடுகிறது. தி.மு.க.,வின் ஸ்டாலின், கனிமொழி என பலரும் முன்பு கருப்பு கொடி ஏந்தி மதுவுக்கு எதிராக போராடினார்களே..
அ.தி.மு.க ஆட்சியில் மகளிருக்கு 1500 ரூபாய் கொடுத்தாலும் டாஸ்மாக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த எங்களிடம் திட்டம் உள்ளது. ஸ்டாலின் போல முன்வாசலில் கொடுத்துவிட்டு பின் வாசலில் பிடுங்குவது நாங்கள் அல்ல.
இந்தியா கூட்டணியில்தான் பிரேக் இருக்குமே தவிர, தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரேக் எதுவும் இல்லை.” இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.