திருச்சியில் போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் ரூ. 4.75 கோடி முறைகேடு செய்த பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவருக்கு சொந்தமாக திருச்சி, ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் சுமாா் 17 ஏக்கரில் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இவா், சென்னையில் வசித்து வருவதால் ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த கோவிந்தன் என்பவருக்கு தோட்டத்தை குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்நிலையில் கோவிந்தனுக்கு, அதே பகுதியில் வசித்து வந்த நாமக்கல்லைச் சோ்ந்த தேவராஜன் என்பவா் அறிமுகமாகி முதியோா் இல்லம் அமைக்க இடம் வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
அதற்கு இந்த தோப்பு தனது அக்காவின் வீட்டுக்காரா் ரங்கசாமிக்குச் சொந்தமான இடம் எனவும், அந்த இடத்தை ரூ.19 கோடிக்கு விற்பதாக ஒப்பந்தம் செய்து ரங்கசாமி பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்து தேவராஜனிடம் கொடுத்துள்ளாா் கோவிந்தன். பின்னா், தேவராஜன் பேசியபடி பல்வேறு தவணைகளில் ரூ. 4.75 கோடி வரை கோவிந்தன், அவரது மனைவி கீதா, நில முகவா்கள் வாசு, சேகா் ஆகிய 4 பேரிடமும் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், பல மாதங்களாகியும் கோவிந்தன் அவருக்குப் பத்திரப்பதிவு செய்து தராமல் இழுத்தடித்து வந்துள்ளாா். பின்னா் இது தொடா்பாக விசாரித்தபோது, கோவிந்தன் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தேவராஜன் திருச்சி மாநகரக் காவல் ஆணையரகம், மாநகரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து கோவிந்தன், அவரது மனைவி கீதா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இது குறித்து மாநகரக் குற்றப்பிரிவு போலீஸாா், "கைதான கோவிந்தன் பா.ஜ.க விவசாயி அணி மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறாா். இவா், நில உரிமையாளா் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, கோவிந்தன், அவரது மனைவி கீதா ஆகியோரை கைது செய்துள்ளோம். மேலும், நில இடைத்தரகா்கள் வாசு மற்றும் சேகா் ஆகியோரை தேடி வருகிறோம்" என தெரிவித்தனர்.
கோவிந்தன் பா.ஜ.க சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவா் என்பதும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களுக்கு வழித் துணையாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“