கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு வாக்கு எண்ணிக்கையில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து, ‘ஒத்த ஓட்டு பாஜக’ என ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலும் மற்ற அனைத்து மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, இன்று (அக்டோபர் 12) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 1 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடத்துக்கும் 2 ஊராட்சி தலைவர் பதவிக்கும் 10 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை (அக்டோபர் 12) தொடங்கியது.
இதில், பெரிய நாயகன் பாளையம் ஒன்றியத்தில், குருடம்பாளையம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதிவிக்கு பாஜக கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை தலைவர் கார்த்திக் போட்டியிட்டார். அவருக்கு ஒரே ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. தனக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்ததால் பாஜக பிரமுகர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது வீட்டில் 5 ஓட்டுகள் இருந்தும் அவருக்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது என்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் குருடாம்பாளையம் உராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, ‘ஒத்த ஓட்டு பாஜக’ '#Single Vote BJP' என ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் ட்விட்டரில் ‘ஒத்த ஓட்டு பாஜக’ '#Single Vote BJP' என கிண்டல் செய்து பதிவிட்டு வருவதால் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருப்பது குறித்து பாஜக தரப்பில் கூறுகையில், “ஊராட்சி வார்டு பதவிக்கு கட்சி சின்னம் அளிக்கப்படுவதில்லை. கார்த்திக் பாஜகவில் இருந்தாலும் அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை. அப்படி இருக்கும்போது பாஜக ஒரு ஓட்டு பெற்றதாக குறிப்பிடுவது என்பது பாஜகவை இழிவுபடுத்த வேண்டும்” என்ற எண்ணமே என்று பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற பாஜக பிரமுகர் கார்த்திக் ஊடகங்களிடம் கூறுகையில், “சமூக வலைதளங்களில் 9வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு வாக்குதான் வாங்கியிருக்கிறார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான செய்தி. நான் இருப்பது 4வது வார்டில். எனது குடும்பத்துக்கு ஓட்டு 4வது வார்டில்தான் இருக்கிறது. 9வது வார்டில் இடைத்தேர்தல் வந்ததால் போட்டியிடுவதற்கு முயற்சி செய்து பார்க்கலாம் என்று வேட்புமனு அளித்தேன். என்னுடைய குடும்ப சூழ்நிலையால் பிரசாரத்திற்கு போக முடியவில்லை. நான் போட்டியிடுவதை சொல்லி யாருக்கும் என்னை அறிமுகப்படுத்தவில்லை. அதனால், ஒரு ஓட்டு கிடைத்திருக்கிறது. அதையே நான் வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன். அடுத்த முறை கண்டிப்பாக 4வது வார்டில் போட்டியிட்டு நன்றாக வேலை செய்து மிகப்பெரிய வெற்றியை அடைவேன். கட்சிக்கு பெருமை சேர்த்து தருவேன். இதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். என்னைப் பற்றி தவறான கருத்துகளை அனைத்து அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பதிவிடுகிறார்கள். இது குறித்து நான் கட்சி மேலிடத்தில் சொல்லி வழக்கு தொடரலாம் என்றிருக்கிறேன்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.