தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்து உள்ளன. ஆனால் எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது எனக் கூறுவது சிக்கலானது என்கிறார்கள் மொழியியலாளர்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து அண்மையில் வெளியான 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது, அந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் பங்கேற்று இருந்தார். கமல்ஹாசன் அவரைப் பற்றிப் பேசும்போது, "ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் தொடங்கும் போது 'உயிரே, உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்" என்று பேசி இருந்தார்.
ஆனால், கமல்ஹாசனின் கன்னட மொழித் தோற்றம் குறித்த இந்தக் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சரில் துவங்கி, கன்னட அமைப்புகள் வரை இதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இருந்தபோதும் தனது பேச்சை பின்வாங்கப் போவதில்லை என கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.
கமல்ஹாசன் கருத்திற்கு தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கோவை பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் கவுடா என்பவர், கோவை தெற்கு மாவட்ட பகுதியான கோவை, பொள்ளாச்சி சாலை சிட்கோ தொழில் பேட்டை பகுதிகளில் ஒட்டி உள்ள போஸ்டர்களில் "தமிழ் எங்கள் உயிர்மொழி கன்னடம் எங்கள் தாய்மொழி. கன்னடமொழி விரோதி கமல் ஹாசனையும், அவரின் கருத்தை ஆதரிக்கும் தி.மு.க கூட்டணிகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்" என போஸ்டர்கள் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை