தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் அமித் ஷா தொடர்பான பேச்சை பேரவை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தியும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தடையில்லாத குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், “அமித் ஷா மற்றும் அவரது மகன் ஜெய் ஷா தொடர்பாக உதயநிதி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பேசிய வானதி சீனிவாசன், “உதயநிதி ஜெய் ஷா குறித்து பேசியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டு மந்திரி ஒருவரின் மகன்தான் தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ளார் என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார்.
தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மகன் என்பதால் உதயநிதி செய்யும் தவறுகள் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவதில்லை. அதை அவர் நியாயப்படுத்துகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்த நிலையில் அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் மகன் உங்களுக்குதான் நண்பர். நாங்கள் சொன்னால் கேட்கமாட்டார். ஆனால் நீங்கள் சொன்னால் கேட்பார்கள்” எனப் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“