L Murugan | Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்த நாட்டுப்புற நடன கலைஞரான 87 வயது முதியவர் பத்திரப்பன். இவர் தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய நடன கலையான வள்ளி ஒயில் கும்மி நடன குரு ஆவார். அழிந்து வரும் இந்த நடன கலையை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பலருக்கும் இதனை கற்றுக் கொடுத்து வருகிறார். இவரிடம் பயின்ற பலரும் வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர்களாக உள்ளனர்.
தள்ளாத வயதிலும் தளராமல் இக்கிராமிய கலையை தொடர்ந்து ஊக்குவித்து வந்த பத்திரப்பனுக்கு தற்போது மத்திய அரசு பத்மஶ்ரீ விருது அறிவித்து கவுரவித்துள்ளது. இத்தகவல் கிடைக்கப்பெற்றதுடன் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தாசம்பாளையம் பகுதியில் உள்ள பத்திரப்பனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் இயற்கை வேளாண் விவசாயியான பாப்பம்மாள் என்ற நூறு வயதை கடந்த மூதாட்டிக்கு மத்திய அரசின் பத்மஶ்ரீ விருது இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது நடன குரு பத்திரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டதன் மூலம் குறுகிய காலத்தில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இருவர் பத்மஶ்ரீ பட்டம் பெற்று கோவை மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“