சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்.எல்.ஏ கூட இல்லை என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுகவினர் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தூய இருதய மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி சில் நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவி அளித்த மரண வாக்குமூலத்தின்படி, விடுதி வார்டன் சகாய மேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, பள்ளியில் மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரி பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், கட்டாய மதமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டு உயிர் விட்ட லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்.எல்.ஏ கூட இல்லை என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அதிமுகவினர் சமூக ஊடகங்களில் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நயினார் நாகேந்திரன் பாஜகவின் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “அதிமுக இன்றைக்கு கூட்டணியில் இருக்கிறது, இல்லை என்பது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுகவை நாம் பார்க்க முடியவில்லை. நிறைய பேர் நீங்களே பேசலாம்னு கேட்கலாம். 4 பேர் ஒன்னும் பேச முடியாது. பேசலாமே தவிர வெளியே புடிச்சு போட்டுடுவாங்க. அண்ணன் ஹெச்.ஆர்.க்கு எல்லாம் தெரியும் மார்ஷல்களை விட்டு புடிச்சு தூக்கி வெளியே விட்டுவிடுவாங்க. 4 பேரில் 2 பேர் பெண்கள். அண்ணன் எம்.ஆர். காந்தி பாவம் அவருக்கு 70 வயசாச்சு. அவர் தோளுக்கு மேல வேணா ஏறி விளையாடலாமே தவிர வேற ஒண்ணும் சொல்ல முடியாது. பேசலாம். மைக்கை கட் பண்ணி விடுவார்கள். ஆகையால், அண்ணா திமுக எதிர்க்கட்சி இல்லை. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும் இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சியாக இன்றைக்கு ஊடகங்களில் பேசும்படியான தலைவராக அண்ணாமலை இருக்கிறார்.” என்று தெரிவிக்கிறார்.
சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுகவை நாம் பார்க்க முடியவில்லை என்று நயினார் நாகேந்திரன் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அதிமுகவினர் சமூக ஊடகங்களில் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதிமுகவைப் பற்றி நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு மதுரை மண்டல அதிமுக ஐ.டி. விங் செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அண்ணன் நயினார் நாகேந்திரன் நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன்…?? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்…!!” என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுகவினர் பலரும் சமூக ஊடகங்களில் கடுமையாக பதிலடி கொடுத்து வரும் நிலையில், நயினார் நாகேந்திரன், அதிமுகவைப் பற்றிய தனது கருத்துக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!!” என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.