தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க சட்டமன்றக் கட்சிட் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்தார். இதற்கு வணிகத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பதிலடி கொடுத்துப் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக் குழு இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கான பரிந்துரைகளை அளித்தது. அதில், ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு இந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை திங்கள்கிழமை (அக்டோபர் 17) கூடியது. இரண்டாவது நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துப் பேசிய பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்தி திணிப்பு இல்லை என்று கூறி இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாகப் பேசினார்.
சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரன் பேசத் தொடங்கியபோது, சபாநாயகருக்கு வணக்கம் என்று கூறி சில நொடிகள் அமைதியாக இருந்ததால், சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, “தமிழ்ல பேசுங்க…. வார்த்தை வரல இல்லையா?” என்று நகைச்சுவையாக கம்மெண்ட் அடித்து கலாய்க்க அவையில் உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
இதற்கு நயினார் நாகேந்திரன் தமிழில்தான் பேசுகிறேன் என்று கூறி தொடர்ந்து பேசினார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மாணம் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
“தாய்க்க்கொரு பழிநேர்ந்தால், மகனுக்கு உண்டு. அன்னை தமிழுக்கு ஒரு பழி நேர்ந்தால் நம் அனைவருக்கும் உண்டு. அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. நிச்சயமாக இந்தி திணிப்பு இருக்குமே என்று சொன்னால், தமிழகத்தில் பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்குப் போனாலும் சரி, அயோத்திக்குப் போனாலும் சரி அங்கே திருக்குறளையும் பேசுவார். நமது தமிழ் வளர்த்தப் புலவர்களையும் பேசுவார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில், தமிழுக்காக ஒரு தனி இருக்கையையே வாங்கித் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து நிச்சயமாக இல்லை. அதே நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மாணத்தின் மீது பேசுகிறபோது, இந்தி பேசாத சி பிரிவு மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டிருப்பது உண்மையிலேயே எந்த வழியில் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆக இந்த பரிந்துரையின்படி 9.09.2022 பரிந்துரையில், சி பிரிவு மாநிலங்களில் நிச்சயமாக தாய்மொழி கட்டாயம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. தாய்மொழி வழிக் கல்வி நிச்சயமாக அந்தந்த மாநிலத்தில், அதாவது இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாயமாக தாய்மொழி வழிக் கல்வி இருக்க வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி, 2 தினங்களுக்கு முன்பாகக்கூட பேசியிருக்கிறார். அதாவது எல்லா மாநில சட்டங்களும் அந்தந்த தாய்மொழியில் இருக்க வேண்டும். எல்லா நீதிமன்றத் தீர்ப்புகளும் அந்தந்த மாநில தாய்மொழியில் இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இந்த வகையில், நம்முடைய தாய்மொழி தமிழுக்கு இழுக்கு வரும் என்று என்னால் எந்தவிதத்தில் நம்ப முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும்கூட, அதில் பரிந்துரைத்துள்ளபடி, தாய்மொழி கட்டாயம் நிச்சயமாக இருக்கும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நிச்சயமாக அதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. உள்துறை அமைச்சரும் பேசியிருக்கிறார். பல்வேறு கருத்துகள் இங்கே சொல்லப்பட்டன.
இங்கே படிக்கிற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உத்திரப் பிரதேச மாநிலத்திற்குப் போய், அங்கே மருத்துவக் கல்வியை இந்தியில் படிப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் நிச்சயமாக ஆங்கில வழியில் படிப்பதற்கு வழிவகை இருக்கிறது. அதாவது, இந்தியைத் தவிர, இந்தி தெரியாதவர்கள், அங்கே ஆங்கிலம் படித்துக்கொள்ளலாம் என்ற உறுதிமொழியும் அங்கே இருக்கிறது.
அந்த வகையில் இதையெல்லாம் வைத்துப் பார்க்கிறபோது, நிச்சயமாக தாய்மொழித் தமிழுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது என்று மத்திய அரசின் சார்பில் நான் சொல்லிக்கொண்டு, முதலமைச்சர் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை என்னால் ஏற்க இயலாது என்று சொல்லி வெளிநடப்பு செய்கிறேன்” என்று கூறி நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்தார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மாணம் குறித்து கருத்து தெரிவித்து வெளிநடப்பு செய்த நயினார் நாகேந்திரனுக்கு வணிகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பதிலளித்துப் பேசினார்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: “நயினார் நாகேந்திரன் பேசுகிறபோது தாய்மொழியிலேயேதான் தொடரும் என்று கூறுகிறார். நான் அவரிடத்திலே கேட்கிறேன். அவர் சாந்திருக்கிற இயக்கத்தைக் கேட்கிறேன். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஐ.ஐ.டி-களில் தமிழ் மொழியை பயிற்றுமொழியாகக் கொண்டுவருவோம் என்று சட்டத்தை இயற்ற பா.ஜ.க அரசு தயாராக இருக்கிறதா என்பதை நான் அவர்களுக்கு கேள்வியாக வைக்கிறேன். அவர்களிடத்தில் அந்த அதிகாரம் இருக்கிறது. அதை செய்வதற்கு அவர்கள் முன்வரவில்லை. இந்த கேள்வி வரும் என்றுதான் அவர்கள் அவையில் இருந்து கிளம்பி வெளியே போயிருக்கிறார்கள். எனவே, இங்கே தாய்மொழியைக் கொண்டுவருவதை விட்டுவிட்டு, இங்கே நீங்கள் தமிழ்மொழிக்கு பாதகத்தை செய்துவிட்டு, ஐ.நா-வில் போய் திருக்குறளை சொல்கிறோம், ஐ.நா-வில் தமிழில் பேசுகிறோம் என்று சொல்வது. படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயிலாக இருக்கிறது” என்று காட்டமாகப் பதிலளித்துப் பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.