தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி 63-வது வார்டு உட்பட்ட ராமநாதபுரம் 80 அடி சாலையில் ஒரு வாக்குச்சாவடி உள்ளது. இதற்கு அருகே சிறிது தூரத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் இன்று காலை வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம், ஹாட் பாக்ஸ் விநியோகிப்பதாக புகார் எழுந்தது.
இதையறிந்த பாஜக உள்ளிட்ட மற்ற கட்சியின் நிர்வாகிகள் இணைந்து, திருமண மண்டபத்திற்கு பூட்டு போட்டனர். அப்போது, சில பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் உள்ளே இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலரிடம் புகார் அளித்தனர் ஆனால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி வேட்பாளர்கள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நடவடிக்கை எடுக்காமல் பூட்டை உடைத்து திமுகவினரை வெளியே அனுப்பிவிட்டதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோவை கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், கோவை தெற்கு தொகுதியில் ராமநாதபுரம் பகுதி திருமண மண்டபத்தில்
திமுக கட்சியினர் பரிசுப் பொருள் கொடுக்க கூட்டியிருந்ததை அறிந்து பாஜக கட்சியினர் பூட்டி வைத்ததை தமிழக காவல் துறை உடைத்து மக்களை வெளியே அனுப்புகின்றனர். அதிகார அராஜகத்துக்கு வாக்கு சீட்டில் பதிலளிப்போம்" என குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil