Sanatana Dharma row : கோவை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன் “திருவாரூர் அரசு கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை” குறித்து கேள்வியெழுப்பி உள்ளார்.
சனாதன தர்ம சர்ச்சை
சென்னையில் கடந்த வாரம் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா” என ஒப்பிட்டு பேசினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
அவருக்கு, எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியில் உள்ள தலைவர்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அவருக்கு எதிராக மும்பை காவல் நிலையத்தில் மத உணர்வை புண்படுத்துதல் மற்றும் பகைமையை உருவாக்குதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் கல்லூரி சுற்றறிக்கை
இந்த நிலையில் திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் அக்கல்லூரி முதல்வர், “இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்த நாளான செப்.15ஆம் தேதி மாலை 3 மணியளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வானதி சீனிவாசன் கேள்வி
இந்த சுற்றறிக்கை தொடர்பாக பாரதிய ஜனதா எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, “சனாதனம் குறித்து அரசு கல்லூரி மாணவர்கள் இடையே திமுக நஞ்சை விதைக்கிறது. கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியலமைப்புக்கு எதிராக இல்லையா?” என வினா எழுப்பியுள்ளார்.
மேலும் சனாதனம் தொடர்பான சர்ச்சையை திசைதிருப்பவும் இதுபோன்ற நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“