Vanathi Srinivasan : திரும்ப திரும்ப பொய்களை பரப்புவதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பி உள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கழித்து, 50 சதவீதத்திற்கும் குறைவான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கியுள்ளது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், பிரதமர் சொன்ன ரூ. 15 லட்சம் என்ன ஆச்சு என்று, கொஞ்சமும் கூச்சமில்லாமல் திரும்ப திரும்ப பொய்யை பரப்பி வருகிறார்.
ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்பதில் நம்பிக்கை கொண்ட கட்சியான திமுகவிடம் நேர்மை, நியாயம், உண்மையை எதிர்பார்க்க முடியாது.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றுதான், 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
கடந்த ஒன்பது ஆண்டுகால மோடி ஆட்சியின் சிறப்பான செயல்பாடுகளால்தான் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக பாரதம் மாறியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் உலகமே கணித்துள்ளது.
மோடி ஆட்சியில்தான் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர், கழிவறை, மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, அனைவருக்கும் வீடு, வங்கிக் கணக்கு என அடிப்படை வசதிகள் சாதத்தியமாகி இருக்கின்றன.
திமுக முதல் குடும்பத்தின் ஊழல்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதனாலேயே அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசினார்கள்.
ஏனெனில் யார் ஊழல்வாதிகள் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பொய்கள் பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“