டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், டாஸ்மார்க் மது குடித்து இறக்கும் பொழுது இழப்பீடு தர வேண்டும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வானதி சீனிவாசன் கூறியதாவது:
தமிழகத்தில் கள்ளச்சாராயம் சாவுகள் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. மதுவிலக்கு ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு அரசாங்கம் சொல்லும் ஒரே பதில் கள்ளச்சாராயம். ஆனால் கலாச்சாராயம் சாவு நடைபெறுகிறது.
இதற்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். எந்த அரசியல் கட்சியினர் இதில் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது.
கோவைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் விமானத்தில் கோரிக்கை வைத்தேன். புதிய ரோடுகளை கண்ணில் பார்க்க முடியவில்லை என தெரிவித்தேன். வரக்கூடிய காலத்தில் என் முன்னே சாலைகள் சரி செய்ய அதிகாரிகளிடம் பேசினார்.
காங்கிரஸ் கட்சியை நம்பி வருவதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் தயார் இல்லை. மேடைக்கு செல்வார்கள் ஆனால் தேர்தல் களம் என்று வந்து விட்டால் வேறு. கர்நாடகா வெற்றியை வைத்து கனவு காண்கிறார்கள். பேருக்காக கட்சியை நடத்துபவர்களை கூட்டிக் கொண்டு வந்து வைத்தால் கூட அடுத்த முறை மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
நாட்டில் இருக்கும் 95% மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டால் பிரச்சனை இல்லை. 2000 ரூபாய் நோட்டு எங்கெங்கு இருந்து வருகிறது என்பதை கண்காணித்தாலே நடவடிக்கை எடுப்பது சுலபம்.
2000 ரூபாயை கடைக்காரர்களோ வியாபாரிகளோ வாங்க மறுத்தால், வேண்டுமென்றே அலைக்கழித்தால் நடவடிக்கை எடுக்கலாம்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் தரார்கள். நல்ல சாராயம் குடித்தும் பலர் இறக்கின்றனர். மது குடிப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் மூலம் உயிர் இழப்பு ஏற்படும் பொழுது இழப்பீடு தர வேண்டும். அமைச்சர் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கொடு என்கிறார் .நானே டாஸ்மாக் கடைக்கு போய் தான் ஆதாரம் கொண்டு வரணும். இவ்வாறு தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“