ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது; வேல்முருகன் பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

மத்திய நிதியமைச்சர் குறித்த தரம்தாழ்ந்த பேச்சுக்கு வேல்முருகன் உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் – பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vanathi velmurugan

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் த.வா,க எம்.எல்.ஏ வேல்முருகன்

உங்களுடன் அரசியல் களமாடும் சக பெண் தலைவர்களைக் கொச்சைப்படுத்துமளவிற்கு ஆணவம் உங்கள் அறிவுத் திறனை மழுங்கடித்துவிட்டதா? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்திற்கு வர வேண்டிய சமக்ர சிக்ஷா நிதி தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு சமக்ர சிக்ஷா நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா? ஏற்றால் தான் நிதி வழங்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார். அமைச்சரின் பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய வேல்முருகன், “நாம் கேட்கிற கேள்விகளுக்கு கூட பா.ஜ.க.,வால் பதில் சொல்ல முடியவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்” எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் வேல்முருகன் பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாந்தரில் சாதி வகுப்பது சரியா வேல்முருகன்?. மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற போர்வையில், நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை  அடிப்படை மாண்பின்றி ஒருமையில் சாடியதோடு, சாதிய ரீதியாகவும் அவரைக் கீழ்த்தரமாக விமர்சித்த உங்கள் அநாகரிகப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

“ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை” என பெண் உரிமைகளைப் பறைசாற்றிய பாரதி பிறந்த மண்ணில், “பெண் அமைச்சர் அடக்கமாக இருக்கவேண்டும்” எனவும், “தயிர் சாதம் சாப்பிடும் மாமி” எனவும் பொது வாழ்வில் உள்ள ஒரு மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது மட்டுமன்றி, வெட்கக்கேடானது. 

உங்களுடன் அரசியல் களமாடும் சக பெண் தலைவர்களைக் கொச்சைப்படுத்துமளவிற்கு ஆணவம் உங்கள் அறிவுத் திறனை மழுங்கடித்துவிட்டதா? இதுதான் நீங்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் லட்சணமா வேல்முருகன்? 

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், உங்களின் பொறுப்பையும், தவறையும் உணர்ந்து, மத்திய நிதியமைச்சர் குறித்த உங்களின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Vanathi Srinivasan Velmurugan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: