தமிழகத்தில் தற்போது கூலிக்கு கொலை செய்யக்கூடிய கும்பல்கள் பெருகி வருகின்றன, இதைப் பற்றி கேட்டால் அமைச்சர்கள் அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உடற்பயிற்சி கூடத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “நகர்ப்புற பகுதியில் சிறிது சிறிதாக பூங்காக்கள் இழந்து கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்துக் கொடுத்தாலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பராமரிப்பது இல்லை. இது தொடர்பாக ஆணையாளரை நேரில் சந்தித்து பேசியுள்ளேன்.
கோவை மத்திய சிறையை மாற்றிவிட்டு அதை மிகப்பெரிய செம்மொழி பூங்காவாக அமைப்பது அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது. ஆனால் மத்திய சிறைக்கு மாற்று இடம் பார்க்கவில்லை. எப்போது மத்திய சிறையை மாற்றி முழுமையான செம்மொழி பூங்கா வரும், பெயரளவில் அடிக்கல் நாட்டப்பட்டு கொஞ்ச இடத்தில் மட்டும் வேலை நடைபெற்று வருகிறது.
தி.மு.க ஆட்சி என்பது எப்போதுமே ரவுடிகளின் ஆட்சிதான். தமிழகத்தில் தற்போது கூலிக்கு கொலை செய்யக்கூடிய கும்பல்கள் பெருகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. இதைப் பற்றி கேட்டால் அமைச்சர்கள் அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள்.
முறையான அனுமதி பெறாமல் அரசியல் தலைவர்களை கையில் வைத்துக்கொண்டு ரிசார்ட் கட்டி, முழுவதுமாக இயற்கையின் நலனை புறக்கணிக்கும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பசுமை தீர்ப்பாயம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் தீர்ப்புகளின் மூலமாகத்தான் காடுகளும் மலைகளும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் என்பது வயநாடு போன்று மிகவும் பழமையான மழைத் தொடர். மேலும் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
முதல்வரும் நிர்வாகத்தில் இருப்பவர்களும் போதை எதிர்ப்புக்கான உறுதிமொழியை எடுத்தால் மட்டும் போதாது, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசாங்கம் எங்களிடம் இருக்கிறது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்,” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.