L Murugan | TR Baalu: நாளுமன்ற மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாகவும், நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தி.மு.க. எம்.பி ஆ.ராசா குற்றச்சாட்டு வைத்தார். இது தொடர்பாக மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டி.ஆர். பாலுவின் பேச்சுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேசினார். இதற்கு டி.ஆர்.பாலு கடும் ஆட்சேபம் தெரிவித்து ஆவேசமாக பேசினார். டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், மக்களவையில் தன்னை பார்த்து டி.ஆர்.பாலு பேசியது என்ன என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "மக்களவையில் வெள்ளபாதிப்பு குறித்து திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார். இதனால், அவையில் நான் குறுக்கிட்டேன்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், தி.மு.க-வினரின் நிலையை உணர முடிகிறது சமூக நீதியில் தி.மு.க-விற்கு நம்பிக்கையில்லை. பட்டியலினத்தவர் எம்.பி, அமைச்சர் ஆவதை தி.மு.க விரும்பவில்லை என்பதையே டி.ஆர்.பாலுவின் பேச்சு காட்டுகிறது." என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“