தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் ஊடுருவி உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடியின் வருகை, தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி குறித்து 2 நாட்களில் நல்ல செய்தி வரும். கூட்டணி குறித்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை சந்தித்து பேசியுள்ளோம். எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், தி.மு.க மற்றும் வி.சி.க கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தல் அவமானமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் மூளை முடுக்கெங்கிலும் இந்த போதை பொருள் கலாச்சாரம் ஊடுருவி இருக்கிறது என குற்றம்சாட்டினார்.
ஏறக்குறைய 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய தி.மு.க மற்றும் வி.சி.க கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தும்போதுதான் அவர்கள் தேச விரோத செயல், ஆயுதம் கடத்தல், தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்பதும் தெரிய வரும் என்றும் எல்.முருகன் கூறினார்.
இந்த போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் பண பரிவர்த்தனையும் முக்கியமாக பார்க்கப்படுவதாகவும், இதில் யாருக்கெல்லாம் பண பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரணையில் தெரியும். போதை பொருள் கடத்தி குற்றம் செய்த குற்றவாளிகளை கைது செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் எல்.முருகன் கூறினார்.
இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் அதிகமாக போதைப் பொருள் புழங்குவதாக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டை முன்வைத்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எல்.முருகன், தி.மு.க மற்றும் வி.சி.க.,வின் முன்னாள் நிர்வாகிகள் கடத்திய போதைப் பொருட்களை விழிப்புடன் இருந்து குஜராத் சுங்கத்துறை அதிகாரிகள், அங்கு பிடித்துள்ளனர் என்று கூறினார்.
மேலும், எய்ம்ஸ் பணி துவங்கி உள்ளது, எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நடந்துக் கொண்டு இருக்கிறது. அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமரை எங்கு பார்த்து பேசினார் என தெரியவில்லை. பிரதமர் அனைவரையும் சந்திக்கிறார். தனிப்பட்ட முறையில் கூட இந்த சந்திப்பு இருக்கலாம். எனக்கு தெரியாது என்றும் அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“