ரயில் நிலையத்தில் டீ விற்றவர் என பிரதமர் மோடியை தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சித்த நிலையில், ரயிலில் டிக்கெட் எடுக்காதவர் என கலைஞரைக் குறிப்பிடும் வகையில் பா.ஜ.க.,வின் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இந்த வார்த்தை மோதல் ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள், அவர் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எப்படி செயல்பட்டார் எனத் தெரிந்துக் கொள்ள வேண்டும். என பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள்: 2 அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரம்; விரைவில் ஊழல் பட்டியல்: திருச்சியில் அண்ணாமலை பேட்டி
இதற்கு, ரயில் நிலையத்தில் டீ விற்ற ஒரு சாமானியன் இன்று ஒட்டுமொத்த ரயில்வேயையே தனியாருக்கு விற்கும் நிலைக்கு உயர்ந்த உள்ளார் என்றால் அந்த மனிதரை பார்த்து படித்து தெரிந்துகொள்ளதானே வேண்டும்!! என்று தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சித்தார்.
இந்தநிலையில், பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி ரயிலில் பயணம் செய்வதற்கு கட்டணமே செலுத்தாமல் (வித்தவுட்டில்) சென்ற சாமானியர்கள், அதே ரயிலில் சொகுசு ‘சலூன் கோச்சில்’ செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள் என்றால், அந்த சலூன் கோச்சில் அவர்களை பயணம் செய்ய வாய்ப்பளித்தவர்களை பார்த்து வியக்கத்தானே வேண்டும்? என பதிலடி கொடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை வரும்போது ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர் என பல காலமாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். கருணாநிதி சொந்த ஊரில் இருந்து ஒன்றும் இல்லாமல் வந்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து நிறைய சம்பாதித்து விட்டார் என அவர் மீது எதிர்கட்சிகள் விமர்சனம் வைத்து வருகின்றன. ஆனால், திரையுலகில் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பொருள் ஈட்டி வந்தவர் கருணாநிதி, அவர் வித்தவுட்டில் சென்னைக்கு வந்தார் என்பது மோசமான அவதூறு என்று தி.மு.க.,வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்கு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக தென்காசிக்கு புறப்பட்டார். அவருடன் துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரும் ரயிலில் பயணம் செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் பயணித்த ரயில் பெட்டி சிறப்பு வசதிகள் அடங்கிய சலூன் கோச் பெட்டி. இந்த சலூன் கோச் பல்வேறு வசதிகளை கொண்டது. கழிவறை வசதி, இரண்டு படுக்கையறைகள், உணவு அருந்தும் இடம், சோபா, சமையலறை, டி.வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த கோச்சில் இருக்கும்.
குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் பயணம் செய்வதற்காக ரயில்வே இதை பிரத்யேகமாக உருவாக்கியது. இருப்பினும் இதனை சாமானியரும் பயன்படுத்தலாம். 2 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், யார் வேண்டுமானலும் இதில் பயணிக்கலாம். இந்திய ரயில்வேயிடம் மொத்தம் 336 சலூன் கோச் பெட்டிகள் உள்ளன.
இப்படிப்பட்ட சிறப்புமிக்க சொகுசு சலூன் கோச்சில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தது கூடுதல் கவனம் பெற்றது. இந்நிலையில் தான் இதைக் குறிப்பிட்டு, தி.மு.க.,வின் ராஜீவ் காந்திக்கு பா.ஜ.க.,வின் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil