பாஜக சிறுபான்மையினர்களுக்கு எதிரான கட்சி என்ற பொது மக்களின் மனநிலையை உடைப்பதற்காக, பாரதிய ஜனதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கட்சியின் தேசிய சிறுபாண்மைப் பிரிவுக்கு 6 துணைத் தலைவர்களும், 3 பொதுச் செயலாளர்களும், 7 செயலாளர்கள் மற்றும் பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராகவும், தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத் என்ற அமைப்பின் தலைவராகவும் வேலூர் இப்ராஹிம் என அழைக்கப்படும் சையது இப்ராஹிம் பதவி வகித்து வருகிறார். தற்போது, இவர் பாஜக வின் தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலாளராக பாஜக தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அனல் பறந்த பாஜக வின் தேர்தல் பிரசாரங்களில், சிறந்த பேச்சாளரான வேலூர் இப்ராஹிமின் பங்கும் முக்கியத்துவம் பெற்றது. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக பாஜவை அரசியல் விமர்சகர்கள் குறிக்கும் வேளையில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு, அரசியல் கவனம் பெற்றவர் வேலூர் இப்ராஹிம்.
பாஜக வின் அரசியல் பரம எதிரியாக கருதப்படும் விடுதலை சிறுத்தையினரை பல இடங்களில் தாக்கி பேசியவர் இப்ராஹிம். இந்து மதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்துவதாக விசிக தலைவர் திருமாளவன் மீது கடுமையான விமர்சனங்களையும் இப்ராஹிம் முன் வைத்தார். தேசிய குடியிரிமைச் சட்டத்தை தமிழகத்தின் பல இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்த்த வந்த நிலையில், அதற்கு ஆதரவாக பேசியும், ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வந்தவர் இப்ராஹிம்.
இந்த நிலையில், பாஜக வின் தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளராக இப்ராஹிமிற்கு பதவி அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜக வில் தேசிய அளவிலான பதவி வழங்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil